

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா நோயாளிகளுக்கான படுக்கை வசதியை அதிகரிக்கும் நோக்குடன், மாவட்ட ரோட்டரி சங்கங்கள் இணைந்து, 400 ஆக்சிஜன் படுக்கை வசதி கொண்ட சிறப்பு மருத்துவ வளாகக் கட்டிடம் கட்டும் பணி, கடந்த மே 18-ம் தேதி தொடங்கியது. திருப்பூர் டீம்ஏஜ்-இன் பிரிகாஸ்ட் தொழில்நுட்பத்தில் கட்டுமானப் பணிகள் நடந்தன.
அமைச்சர் சு.முத்துசாமியின் முயற்சியின்பேரில், ஈரோடு மாவட்ட ரோட்டரி சங்கங்கள் மற்றும் பல சேவை சங்கங்கள், தொழில் நிறுவனங்கள், வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் மற்றும் பொதுமக்கள் பங்களிப்புடன் ரூ.14.5 கோடி மதிப்பீட்டில், 69 ஆயிரத்து 200 சதுர அடி பரப்பளவில் 3 தளங்களுடன் கட்டுமானப் பணி நடந்தது.
இரவு பகலாக பணிகள் நடந்த நிலையில், 45-வது நாளில் (ஜூலை 1-ம் தேதி) கட்டுமானப் பணிகள் நிறைவடைந்தன. இம்மருத்துவமனைக் கட்டிடத்தை முதல்வர் ஸ்டாலின் விரைவில் திறந்து வைக்கவுள்ளார்.
இதன்மூலம், 45 நாட்களில் கட்டி முடிக்கப்பட்ட மருத்துவமனை கட்டிடம் என்ற வகையில், உலக சாதனை பட்டியலில் இடம் பிடித்துள்ளது. ரோட்டரி சங்க மருத்துவமனை கட்டிடத்துக்கு எலைட் உலக சாதனை சான்றிதழ், ஆசியா சாதனை சான்றிதழ், இந்தியா சான்றிதழ், தமிழன் புத்தக சாதனை சான்றிதழ் ஆகிய 4 சாதனை சான்றிதழ்கள் வழங்கும் விழா நேற்று நடந்தது.
விழாவில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் எச்.கிருஷ்ணன் உண்ணி மற்றும் ரோட்டரி சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.