தாரமங்கலம் கோயில் நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றாதது ஏன்? - சேலம் ஆட்சியர் விளக்கமளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

தாரமங்கலம் கோயில் நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றாதது ஏன்? - சேலம் ஆட்சியர் விளக்கமளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

Published on

தாரமங்கலம் இளமீஸ்வரர் கோயில் நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை கடந்த 5 ஆண்டுகளாக அகற்றாதது ஏன் என்பது தொடர்பாக சேலம் மாவட்ட ஆட்சியர் காணொலியில் ஆஜராகி விளக்கமளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக சேலத்தைச் சேர்ந்த ஏ.ராதாகிருஷ்ணன், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் 14-ம் நூற்றாண்டைச் சேர்ந்த இளமீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு சொந்தமாக தாரமங்கலம் கிராமத்தில் உள்ள நிலங்களை சில தனி நபர்கள் ஆக்கிரமித்துள்ளனர். அந்த நிலத்தில் அனுமதியுமின்றி கட்டிடங்களை கட்டி வருகின்றனர்.

நடவடிக்கை இல்லை

இதுதொடர்பாக கடந்த 2015-ம் ஆண்டே மனு அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்’ என கோரியிருந்தார்.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன், டி.வி.தமிழ்செல்வி ஆகியோர் அடங்கிய அமர்வு, கோயில் நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புக்களை அகற்றக் கோரி மனுதாரர் அளித்த மனு மீது கடந்த 5 ஆண்டுகளாக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காதது ஏன் என்பது தொடர்பாக சேலம் மாவட்ட ஆட்சியர் வரும் ஜூலை 22-ம் தேதி காணொலி மூலமாக ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in