

சென்னை மற்றும் புறநகர் மின்சார ரயில்களில், ஆண் பயணிகளுக்கு தற்போது விதிக்கப்பட்டுள்ள நேரக் கட்டுப்பாட்டை நீக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கரோனா தொற்றின் 2-வது அலை குறைந்து வருவதால், தமிழக அரசு தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டித்துள்ளது. இருப்பினும், பயணிகளின் தேவைக்கு ஏற்ப விரைவு மற்றும் மின்சார ரயில்களை இயக்கி வருகிறது.
ஏற்கெனவே அத்தியாவசிய பணியாளர்கள் மட்டுமே மின்சார ரயில்களில் பயணித்து வரும் நிலையில், மின்சார ரயில்களில் பொதுமக்களும் கடந்த மாதம் 25-ம் தேதி முதல் அனுமதிக்கப்படுகின்றனர்.
அதேநேரத்தில் ஆண்கள், ‘பீக் ஹவர்ஸ்’ எனப்படும் முக்கிய நேரத்தைத் தவிர்த்து அதாவது காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரையிலும், பின்னர் இரவு 7 மணி முதல் கடைசி நேரம் வரையிலும் பயணிக்கலாம்.
ஆனால், அத்தியாவசியப் பணியாளர்களுக்கு இது பொருந்தாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆண் பயணிகளுக்கு தற்போதுள்ள நேரக்கட்டுபாட்டை நீக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
இது தொடர்பாக ஆண் பயணிகள் சிலர் கூறும்போது, “கரோனா ஊரடங்கு தளர்வுக்கு பிறகு மின்சார ரயில்களில் பயணம் செய்ய அனுமதித்திருப்பது வரவேற்கத்தக்கது.
இருப்பினும், ஆண் பயணிகளுக்கு நேரக்கட்டுபாடு இருப்பதால், பயணிகள் விரும்பிய நேரத்துக்கு பயணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, தினக்கூலி தொழிலாளர்கள், கடைகளில் வேலை செய்பவர்கள், திருமணம், மருத்துவமனைகளுக்கு செல்வோருக்கு இது கஷ்டமாக உள்ளது. எனவே, மின்சார ரயில்களில் ஆண்களுக்கு இருக்கும் நேரக் கட்டுபாடுகளை நீக்கிட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.