பரங்கிமலையில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் குத்தகை எடுத்த ரூ.11 கோடி மதிப்பு அரசு நிலம் மீட்பு

பரங்கிமலையில் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்ட ரூ.11 கோடி மதிப்புள்ள நிலம்.
பரங்கிமலையில் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்ட ரூ.11 கோடி மதிப்புள்ள நிலம்.
Updated on
1 min read

சென்னை பரங்கிமலையில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் குத்தகைக்கு விடப்பட்ட ரூ.11 கோடி மதிப்புள்ள அரசு நிலத்தை வருவாய்த் துறையினர் நேற்று அதிரடியாக மீட்டனர்.

செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் தாலுகாவுக்கு உட்பட்ட பரங்கிமலையில் அரசுக்கு சொந்தமான பல நிலங்களை ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் பலர் குத்தகைக்கு எடுத்து பயன்படுத்தி வந்தனர். ஆனால், தொடர்ந்து குத்தகையை நீட்டிக்காமல் பலர் முறைகேடாக விற்பனை செய்துள்ளனர்.

இது தொடர்பாக ஏராளமான புகார்கள் அரசு வந்தன. இதனையடுத்து உரிய விசாரணை நடத்தி நிலங்களை மீட்கும்படி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஆ.ர.ராகுல் நாத் உத்தரவின் பேரில் தாம்பரம் வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் தீவிரமாக ஆய்வு மேற்கொண்டார்.

இதில் பரங்கிமலை கன்டோன்மென்ட் பகுதியில் 31 இடங்களில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது கண்டறியப்பட்டது. இந்நிலையில் தாம்பரம் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் தலைமையில் பல்லாவரம் வட்டாட்சியர் கனிமொழி முன்னிலையில் நேற்று முதல்கட்டமாக சுமார் 15 ஆயிரத்து 455 சதுர அடி நிலத்தை மீட்டனர். அங்கிருந்த கட்டிடத்தை ஜேசிபி இயந்திரம் மூலம் அப்புறப்படுத்தினர்.

மீட்கப்பட்ட நிலத்தின் மதிப்பு ரூ.11 கோடி என வருவாய்த் துறையினர் தெரிவித்தனர். தொடர்ந்து ஆக்கிரமிப்பில் உள்ள அரசு நிலங்களை மீட்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in