அத்திவரதர் வைபவ நினைவாக நடப்பட்ட அத்திமரங்கள் வெட்டப்பட்டு சேதம்: வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

சிறுதாவூரில் அரசு நிலத்தில் நட்டு வளர்க்கப்பட்டு, மர்ம நபர்களால் வெட்டி சேதப்படுத்தப்பட்ட அத்திமரங்கள்.
சிறுதாவூரில் அரசு நிலத்தில் நட்டு வளர்க்கப்பட்டு, மர்ம நபர்களால் வெட்டி சேதப்படுத்தப்பட்ட அத்திமரங்கள்.
Updated on
1 min read

காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற வரதராஜப் பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் 40 ஆண்டுக்கு ஒருமுறை அத்திவரதர் வைபவம் நடைபெறும். இதன்படி கடந்த 2019-ல் 48 நாட்கள் அத்திவரதர் வைபவம் நடைபெற்றது. பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த கோடிக்கணக்கான பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்தனர்.

இந்த வைபவத்தை சிறப்பிக்கும் வகையில் ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும், ஊரக வளர்ச்சித் துறை சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகின்றன. செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியம் சிறுதாவூர் கிராமத்தில் அரசுக்கு சொந்தமான நிலத்தில், ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் சார்பில் ரூ.1.36 கோடியில் 600 அத்திமரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. தண்ணீர் வசதி மற்றும் பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டு மரங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதனால் அத்திமரக் கன்றுகள் நன்கு வளர்ந்துள்ளன.

இந்நிலையில், அத்திமர தோட்டத்துக்குள் நேற்று முன்தினம் இரவு நுழைந்த மர்ம நபர்கள், 105-க்கும் மேற்பட்ட அத்திமரங்களை வெட்டி சாய்த்து, பாதுகாப்பு வேலியை முற்றிலும் சேதப்படுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த ஊராட்சி பணியாளர்கள் மற்றும் திருப்போரூர் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு, இது தொடர்பாக போலீஸில் புகார் அளித்துள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, ``அத்திமரத் தோட்டம் அமைப்பதற்கு முன்பு, இப்பகுதியில் உள்ள அரசு நிலங்களை சிலர் ஆக்கிரமித்து, குடியிருப்புகளை அமைத்துள்ளனர். இந்நிலையில் இங்கு அத்திமரக் கன்றுகள் நட்டு, வளர்க்கப்பட்டதால் சுற்றியுள்ள அரசு நிலங்களை ஆக்கிரமிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த நபர்கள், மரங்களை வெட்டி சாய்த்துள்ளனர். எனவே, இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் உரிய விசாரணை மேற்கொண்டு, அத்திமரங்களை வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றனர்.

திருப்போரூர் வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கட்ராகவன் கூறும்போது, ``சிறுதாவூரில் அத்திவரதர் வைபவ நினைவாக நட்டு வளர்க்கப்பட்டு வந்த அத்திமரங்களை மர்ம நபர்கள் வெட்டியது தொடர்பாக போலீஸில் புகார் அளிதுள்ளோம்'' என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in