

விதிமுறைகளை பூர்த்தி செய்யாத தனியார் பள்ளிகளுக்கு தற்காலிக அங்கீகாரம்கூட வழங்கக்கூடாது. அங்கீகாரம் பெறாத பள்ளிகளை உடனடியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசுக்கு கல்வியாளர்கள் கோரிக்கை விடுத் தனர்.
இது தொடர்பாக ‘மாற்றம் இந் தியா’ அமைப்பின் சார்பில் முன் னாள் துணைவேந்தர் வி.வசந்தி தேவி நிருபர்களிடம் நேற்று கூறிய தாவது:
தமிழகத்தில் பள்ளிகள் தொடங் குவதற்கு எந்த வரையறையோ, சட்டதிட்டமோ கிடையாது. யார் வேண்டுமானாலும் பள்ளியை தொடங்கலாம். எவ்வளவு கட்டணம் வேண்டுமானாலும் வசூலித்துக் கொள்ளலாம் என்ற நிலைதான் இருந்து வருகிறது. பள்ளிகளை ஒழுங்குபடுத்தும் முறை இல்லை. விதிமுறைகளை பூர்த்தி செய்யாத பள்ளிகளுக்கு தற்காலிக அங்கீகா ரம் வழங்கக் கூடாது என்றும், அப்படி அங்கீகாரம் வழங்கப்பட்டால் சம்பந்தப்பட்ட கல்வி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஆனால், விதிமுறைகளை பூர்த்தி செய்யாத தனியார் பள்ளிகளுக்கு தமிழகத்தில் தொடர்ந்து தற்காலிக அங்கீகாரம் கொடுத்துக்கொண்டே வருகிறது அரசு. 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை அங்கீகாரத்தை தொடர்ந்து நீட்டித்துக்கொண்டே இருக்கிறார்கள். தற்போதுகூட 746 பள்ளிகளுக்கு தற்காலிக அங்கீகாரம் கொடுப்பதற்கான முயற்சிகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த பள்ளிகளில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கல்வி பயில்கின்றனர்.
அங்கீகாரம் பெறாத பள்ளிகளை உடனடியாக மூட வேண்டும். அந்த பள்ளிகளில் படிக்கும் மாணவர் களை அருகேயுள்ள அங்கீகாரம் பெற்ற வேறு பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அங்கீகாரம் பெற்ற பள்ளிகளின் பட்டியலை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வண்ணம் இணைய தளத்தில் வெளியிட வேண்டும்.
தனியார் பள்ளிகளுக்கும் கல்வித்துறை அதிகாரிகளுக்கும் இடையே ரகசிய கூட்டு இருக்கிறது. அதனால்தான் விதிமுறைகளை மீறும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என்றார்.
கல்வியாளர் எஸ்.எஸ்.ராஜகோ பாலன், பேராசிரியர் சண்முகவேலா யுதம், மாற்றம் இந்தியா அமைப்பின் இயக்குநர் நாராயணன் ஆகியோர் பேசினர்.