

காரைக்கால் பகுதியில் கடலுக்குள் மீன் பிடித்த ராஜேந்திரன் என்ற மீனவரின் வலையில் அரிய மீன் வகையான ‘கடல் பன்றி’ ஞாயிற்றுக்கிழமை சிக்கியது.
மீன் பிடி தடைக்காலம் முடிந்த பின்னர், மீன் பிடிப்பதற்காக கடலுக் குச் சென்ற காரைக்கால் மீனவர்கள், அதிகமான மீன்கள் கிடைக்காததால் கவலைக்குள்ளாகி இருந்தனர்.
இந்நிலையில், கடந்த சில நாள்களாக சூரை, கேரை வகை மீன்கள் கிடைத்தன. இதனால் மீனவர்கள் சற்றே ஆறுதலடைந்தனர்.
காரைக்கால் மேடு பகுதியைச் சேர்ந்த மீனவர் ராஜேந்திரன் என்பவரது வலையில் ‘கடல் பன்றி’ என்ற அபூர்வ வகை மீன் ஞாயிற்றுக்கிழமை சிக்கியது.
“சுமார் நான்கு அடி நீளமுள்ள இந்த மீன் 200 கிலோ எடையுள்ளது. இந்த மீனின் இறைச்சியை மருந்துப் பொருளாகக் கருதி, மக்கள் அதிக விலை கொடுத்து வாங்குவர்” என்று மீனவர் ராஜேந்திரன் தெரிவித்தார். காரைக்கால் பகுதி மக்கள் இந்த அரிய வகை மீனைக் காண ஆர்வமுடன் கடற்கரையில் குவிந்தனர்.