Published : 08 Jul 2021 03:14 AM
Last Updated : 08 Jul 2021 03:14 AM

தூத்துக்குடி மாவட்டத்தில் கார் சாகுபடி தீவிரம் 3,100 ஹெக்டேர் நிலத்தில் நடவுப்பணிகள் நிறைவு

கார் சாகுபடிக்கு 25 ஆண்டுகளுக்கு பிறகு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் நடவுப்பணியில் உற்சாகமாக ஈடுபட்டுள்ளனர். 3,500 ஹெக்டேரில் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு, 3,100 ஹெக்டேரில் நடவுப்பணி நிறைவுபெற்றுள்ளது.

தூத்துக்குடி மாவட்ட தாமிரபரணி பாசனப் பகுதிகளுக்கு, ஜூன் 1-ம் தேதி முதல் 137 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. நெல் நாற்று நடவு மற்றும் நேரடி நெல் விதைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த மாதம் இறுதி வரை இப்பணிகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தண்ணீர் சிக்கனம் மற்றும் அதிக மகசூல் பெற்றிட திருந்திய நெல்சாகுபடி அல்லது நேரடி நெல்விதைப்பு சாகுபடி முறையைகடைபிடிக்குமாறு, விவசாயிகளுக்கு, வேளாண்மை துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த முறைகளை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றனர். இதனால், விவசாயிகள் பலர் இந்த முறைகளை கடைபிடித்து நெல் சாகுபடி செய்து வருகின்றனர்.

வல்லநாடு பகுதியில் விவசாயிகள் நேரடி நெல் விதைப்பு கருவிமூலம், விதைப்பு செய்யும் பணிகளை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் (பொ) தமிழ்மலர், துணை இயக்குநர் (மாநில திட்டம்) பழனிவேலாயுதம் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர். கருங்குளம் உதவி இயக்குநர் இசக்கியப்பன், வேளாண்மை அலுவலர் காயத்ரி, துணை வேளாண்மைஅலுவலர் ஆனந்தன் மற்றும் களப்பணியாளர்கள் உடனிருந்தனர்.

3,100 ஹெக்டேரில் பணி நிறைவு

இதுகுறித்து இணை இயக்குநர் (பொ) தமிழ்மலர் கூறியதாவது:

தூத்துக்குடி மாவட்டத்தில் கார் நெல் சாகுபடி பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. உயர் நெல் ரகங்களான ஏஎஸ்டி 16, கோ 51, டிகேஎம் 13, என்எல்ஆர் 34449 ஆகியவற்றின், சான்றுபெற்ற சுமார் 42 டன் விதைகள், வேளாண்மை விரிவாக்க மையங்கள் மூலம் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளன. இந்த கார் பருவத்தில் மாவட்டத்தில் 3,500 ஹெக்டேரில் நெல் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை 3,100 ஹெக்டேர் அளவுக்கு சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கருங்குளம், வைகுண்டம் வட்டாரங்களில் தீவிரமாக நடவு பணி நடைபெற்று வருகிறது. இம்மாதம் மட்டும் 1,500 ஹெக்டேர் வரை சாகுபடி நடைபெறும் எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, கார் பருவத்தில் மொத்தமாக 4,600 ஹெக்டேர் அளவுக்கு சாகுபடி இருக்கும் என எதிர்பார்க்கிறோம். உரிய காலத்துக்குள் பயிரை அறுவடை செய்யவும், ஆட்கள் பற்றாக்குறையை சமாளிக்கவும், செலவினங்களை குறைக்கவும் நேரடி விதைப்பு முறை ஊக்குவிக்கப்பட்டு, விவசாயிகள் பரவலாக இம்முறை மூலம் விதைப்பு மேற்கொள்கின்றனர் என்றார் அவர்.

நேரடி நெல் விதைப்பு

வல்லநாட்டை சேர்ந்த விவசாயி சுப்ரமணியன் கூறும்போது, ``நேரடி நெல் விதைப்பு முறையில் ஒரு ஏக்கருக்கு 10 கிலோ விதை மட்டும் தேவைப்படுவதால் விதையின் அளவும், விதைக்கான செலவும் குறைகிறது. ஒரு ஏக்கர் நேரடி விதைப்பு மேற்கொள்ள நேரடி விதைப்பு கருவி மூலம் ரூ.2,000 வரை மட்டுமே செலவாகிறது. இது நடவு செலவைவிட குறைவாக இருப்பதால் இம்முறையை கடை பிடிக்கிறேன்” என்றார் அவர்.

நாணல்காடு கிராமத்தை சேர்ந்த அரசு விநாயகம் என்ற விவசாயி தனது அரை ஏக்கர் நிலத்தில் நேரடி விதைப்பு கருவி கொண்டு நெல் விதைப்பு செய்வதை செயல் விளக்கமாக செய்து காட்டினார். இதனை வேளாண்மை துறை அதிகாரிகள் பார்வையிட்டு பாராட்டினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x