

பெரும்வெள்ள சேதத்திற்கான முழு பொறுப்பையும் ஜெயலலிதாதான் ஏற்கவேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
ஆட்சியில் இருக்கும் கடைசி காலத்திலாவது உண்மையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு ஜெயலலிதா நிவாரண உதவிகளை வழங்கவேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கையில், ''சென்னையில் பெருமழை குறித்து, மத்திய புவி அறிவியல் அமைச்சகம் 48 மணி நேரத்திற்கு முன்பு விடுத்த எச்சரிக்கையை அலட்சியப்படுத்தாமல், தமிழக அரசு நடவடிக்கை எடுத்திருந்தால், சென்னையில் ஏற்பட்ட பெருவெள்ள சேதத்தை தடுத்திருக்கலாமென, இந்த அமைச்சகம் நியமித்த நிபுணர்குழுவின் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. அதன்மூலம் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மோசமான செயல்பாடு மீண்டும் தோலுரித்துக் காட்டப்பட்டுள்ளது.
மேலும், இந்த அமைச்சகம் மூன்று நாட்களுக்கு முன்பே தமிழக அரசுக்கு விடுத்த எச்சரிக்கையை மதித்திருந்தால், குஜராத், ஒடிஸா மாநிலங்கள் போல் பேரிழப்பை தடுத்திருக்கலாம் என்றும், அளவுக்கு அதிகமாக பெய்த மழை மட்டுமே வெள்ளத்திற்கு காரணமல்ல என்றும், சென்னையில் உள்ள மோசமான வடிகால் வசதிகளும், நீர்நிலைகள் முறையாக பராமரிக்கப்படாததும், செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து அதிக அளவு தண்ணீர் திறக்கப்பட்டதும்தான் காரணமென்றும் திட்டவட்டமாக கூறியுள்ளது.
வெள்ளம் குறித்த கணக்கீடும், அதன் அபாயம் குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்து, பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது மாநில அரசின் கடமை என்றும் மத்திய நிபுணர்குழுவின் அறிக்கையில் தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் ஏற்பட்ட பெருவெள்ளம் செயற்கையாக உருவாக்கப்பட்டதுதான் என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
மக்கள் நலனில் சிறிதும் அக்கறை இல்லாமல், இன்னல்களுக்கு ஆளாக்கிய அதிமுக அரசை தேமுதிக சார்பில் நான் வன்மையாக கண்டிக்கிறேன். பெரும்வெள்ள சேதத்திற்கான முழுப்பொறுப்பையும் ஜெயலலிதாதான் ஏற்கவேண்டும்.
தற்போது வெளிவந்துள்ள மத்திய அரசின் நிபுணர்குழுவின் அறிக்கையும், தேமுதிக உள்ளிட்ட அனைத்துக்கட்சிகளும் அதிமுக அரசின் மீது தெரிவித்த குற்றச்சாட்டுகளும் ஒன்றாகவே உள்ளது. எனவே முதல்வர் ஜெயலலிதா வாய்மூடி மௌனமாக இல்லாமல் தமிழக மக்களிடத்தில் விளக்கம்அளித்து, செய்த தவறுக்கு பொறுப்பேற்கவேண்டும்.
அதிமுக அரசின் தவறுகளை எல்லாம் மறைத்திடவே சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கியே, அதிமுகவினரின் பரிந்துரையின் பேரில் சிறு வணிகர்கள் அல்லாத பலருக்கும் ஐந்தாயிரம் ரூபாய் வீதம் கடன் வழங்கப்படுகிறது. நடைபாதை வியாபாரிகள் உள்ளிட்ட, சிறு வணிகர்கள் மழை வெள்ளத்தால் வாழ்வாதாரத்தை தொலைத்து நிற்கிறார்கள். அவர்களுக்கு வட்டி இல்லா கடன் வழங்கவேண்டும் என்று தேமுதிக வலியுறுத்தியது. ஆனால் அதிமுக அரசோ, மத்திய அரசு கொடுத்த சுமார் இரண்டாயிரம் கோடி ரூபாயை நிவாரணப்பணிகளுக்கும், நிவாரணஉதவிகளுக்கும் பயன்படுத்தாமல் தான்தோன்றித்தனமாக செலவு செய்து வருகிறது.
உண்மையான நடைபாதை வியாபாரிகள், தெரு வியாபாரிகள், பெட்டிக்கடை வைத்திருப்போர், சிறு வணிகர்கள் ஆகியோருக்கு கடன் வழங்கினால் அது அவர்களின் வியாபாரத்திற்கு எதாவது ஒரு வகையில் பயன்படும். ஐந்தாயிரம் ரூபாயை வைத்து முழுமையாக வியாபாரம் செய்யமுடியவில்லை என்றாலும், ஏதேனும் ஒரு வகையில் அது அவர்களுக்கு உதவியாக இருந்திருக்கும். ஆனால், முதல்வர் ஜெயலலிதாவோ அரசியல் சுய லாபத்திற்காக, வாக்குவங்கி அரசியல் செய்வதற்காக இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறார் என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
ஏற்கெனவே மத்திய கூட்டுறவு வங்கிகள் அதிமுகவினரின் பிடியில் சிக்கி சின்னாபின்னமாகியுள்ளது. அந்த வங்கிகள் இயங்கமுடியாத அளவில் நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் அந்த வங்கிகளின் மூலம் வழங்கப்படும் கடனால், அந்த வங்கிகள் மேலும் நலிவடைந்துபோகும் நிலைதான் ஏற்படும். அதிமுக அரசு இதில் நடந்துகொள்ளும் விதம் கடைத்தேங்காயை எடுத்து, வழிப் பிள்ளையாருக்கு உடைத்ததுபோல் உள்ளது.
இந்த அரசுக்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்யவேண்டும் என்கின்ற மனப்போக்கு இருந்திருந்தால், உண்மையாக பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு உதவிகளை செய்திருக்கும். மேலும் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் இந்த மழையால் பாதிக்கப்பட்டு, நடைமுறை மூலதனம் இல்லாமல் தொழில் செய்ய முடியாத நிலையில் பல நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. அவர்களுக்கு இதுவரையிலும் எந்த உதவியும் செய்யப்படவில்லை.
அதே போன்று பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, அதிமுகவினர் பரிந்துரை செய்தவர்களின் வங்கிக் கணக்குகளில் மட்டுமே ஐந்தாயிரம் ரூபாய் தொகை போடப்பட்டுள்ளது. இன்னும் இலட்சகணக்கான குடும்பங்களுக்கு இதுவரையிலும் நிவாரண உதவிகள் வழங்கப்படவில்லை.
எனவே ஆட்சியில் இருக்கும் கடைசி காலத்திலாவது உண்மையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கவேண்டும்'' என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.