

திருநெல்வேலியில் நெல்லையப்பர் காந்தி மதியம்மன் கோயிலில் ஆய்வு மேற்கொண்ட அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:
நெல்லையப்பர் கோயிலில் திருப்பணிகள் மேற்கொள்ள தொல்லியல் துறை அனுமதி கோரப்பட்டுள்ளது. இங்குள்ள கருமாரி தெப்பம் முழுமையாக சீர் செய்யப்படும். நவக்கிரஹ சந்திரன் சிலை சீரமைக்கப்படும். கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்துதரப்படும். கோயிலில் வெள்ளி தேர் புனரமைக்கப்பட்டு 2 ஆண்டுகளில் தேரோட்டம் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். நெல்லையப்பர் கோயில் யானை காந்திமதிக்கு 30 நாட்களுக்கு ஒருமுறை மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இனி 15 நாட்களுக்கு ஒருமுறை மருத்துவ பரிசோதனை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. சுவாமி நெல்லையப்பருக்கு நடை பெற்றுவந்த மூலிகை தைல காப்பு வைபவம் கடந்த சில ஆண்டுகளாக நடைபெறவில்லை என்று தெரியவந்தது. அதை உடனே நடத்த அறநிலையத்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
இந்துசமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் வே.விஷ்ணு, பாளையங்கோட்டை சட்டப் பேரவை உறுப்பினர் அப்துல்வகாப் உடனிருந்தனர்
தென்காசி
தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சியில் உள்ள வன்னியப்பர் கோயிலில் ஆய்வு செய்த அமைச்சர், “கோயிலை பராமரித்து குடமுழுக்கு நடத்த ரூ.7.50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இக்கோயிலுக்கு சொந்தமான ஆஸ்திரேலியாவில் உள்ள 2 சிலைகள் மீட்கப்படும். தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.520 கோடி மதிப்புள்ள 81 ஏக்கர் அறநிலையத்துறை நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன” என்று தெரிவித்தார்.