ஆண்டியப்பனூர் அணை கட்ட நிலம் கொடுத்ததற்கு இழப்பீடு கேட்டு விவசாயிகள் சாலை மறியல்: வட்டாட்சியர் சிவப்பிரகாசம் பேச்சுவார்த்தை

திருப்பத்தூர் - ஆலங்காயம் சாலையில் நேற்று மறியலில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்திய காவல் துறையினர்.
திருப்பத்தூர் - ஆலங்காயம் சாலையில் நேற்று மறியலில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்திய காவல் துறையினர்.
Updated on
1 min read

ஆண்டியப்பனூர் அணை கட்ட நிலம் கொடுத்த விவசாயிகள் உரிய இழப்பீடு வழங்கக்கோரி திருப்பத்தூர் - ஆலங்காயம் சாலையில் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆண்டியப்பனூர் பகுதியில் கடந்த 1998-ம் ஆண்டு ‘ஆண்டியப்பனூர் ஓடை நீர்தேக்க அணை’ கட்ட தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது. இதற்காக, அணை கட்ட தேர்வு செய்யப்பட்ட இடத்தை சுற்றிலும் உள்ள விவசாய நிலங் கள் கையகப்படுத்தப்பட்டன.

ஆண்டியப்பனூர் அணை கட்ட நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு அரசு தரப்பில் உரிய இழப்பீட்டு தொகை வழங்கப்படும் என அப்போது தெரிவிக்கப்பட்டது. இதில், ஒரு சிலருக்கு மட்டுமே உரிய இழப்பீட்டு தொகை வழங் கப்பட்டதாக கூறப்படுகிறது. இழப்பீடு கிடைக்காத 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கடந்த 23 ஆண்டுகளாக ஆட்சியர் அலுவலகம், சார் ஆட்சியர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகங்களில் கோரிக்கை மனு அளித்து வந்தனர்.

இந்த மனுக்கள் மீது அரசு அதிகாரிகள் இதுவரை நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த விவசாயிகள் திருப்பத்தூர் - ஆலங்காயம் சாலையில் நேற்று ஒன்று திரண்டு திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதனால், அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இது குறித்து விவசாயிகள் கூறும்போது, ‘‘ஆண்டியப் பனூர் அணை கட்ட 200 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. திமுக ஆட்சிக்காலத்தில் இந்த அணை கட்டப்பட்டது. அப்போது, முதற்கட்டமாக ஒரு சிலருக்கு மட்டுமே இழப்பீடு தொகை வழங்கப்பட்டது. அதன் பிறகு ஆட்சிக்கு வந்தவர்கள் எங்களுக்கு சேர வேண்டிய இழப்பீடு தொகை வழங்கவில்லை.

அணை கட்ட விவசாய நிலத்தை கொடுத்த எங்களுக்கு உரிய இழப்பீடு கிடைக்காமல் கடந்த 23 ஆண்டுகளுக்கு மேலாக அலைக்கழிக்கப்பட்டு வருகிறோம். எனவே, இதற்கான தீர்வு உடனடியாக கிடைக்க வேண்டி மறியலில் ஈடுபட்டு வருகிறோம்’’ என்றனர்.

இந்த தகவலறிந்த திருப்பத் தூர் வட்டாட்சியர் சிவப்பிரகாசம் மற்றும் குரிசிலாப்பட்டு காவல் துறையினர் விரைந்து சென்று பேச்சு வார்த்தை நடத்தினர். அதில், இழப்பீடு வழங்குவது தொடர்பாக உயர் அதிகாரிகளிடம் கலந்து பேசி முடிவு அறிவிக்கப்படும். அனுமதியின்றி மறியலில் ஈடுபட்டால் வழக்குப்பதிவு செய்யப்படும் என காவல் துறையினர் எச்சரித்தனர். இதைத்தொடர்ந்து, மறியலை கைவிட்ட விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in