Published : 07 Jul 2021 06:51 PM
Last Updated : 07 Jul 2021 06:51 PM

வைகை ஆற்றின் குறுக்கே தற்காலிக சாலை அமைக்கும் பணி தீவிரம்: மதுரையின் வட, தென்பகுதி போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு

புதுப் பாலம் கட்டுமானப் பணி நடக்கும் குருவிக்காரன் சாலைப் பகுதியில் வைகை ஆற்றின் குறுக்கே தற்காலிக சாலை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மதுரை மாநகராட்சி ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் வைகை ஆற்றில் ஆற்றுப்படுகையைச் சமப்படுத்துதல், ராஜா மில் சாலை முதல் குருவிக்காரன் சாலை வரை வைகை ஆற்றின் இரு பக்கக் கரைகளிலும் தடுப்புச் சுவர் கட்டுதல், சாலைகள் அமைத்தல், நடைபாதைகள் அமைத்தல், பசுமைப் பகுதியை உருவாக்குதல், பூங்காக்கள் அமைத்தல், சுகாதார அமைப்புகள் ஏற்படுத்துதல், அலங்கார விளக்குகள் உள்ளிட்ட பணிகள் ரூ.84.12 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படுகின்றன.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் வைகை ஆற்றின் குறுக்கே இரண்டு இடங்களில் கட்டிய தடுப்பணைகளில் கழிவு நீர் மட்டுமே தேங்கி நின்று அவை கட்டப்பட்டதற்கான நோக்கம் நிறைவடையாமல் உள்ளது.

இந்நிலையில் வைகை ஆற்றின் வடகரையில் சாலை விரிவாக்கத் திட்டத்தின் கீழ் இரு கரைகளிலும் புதிதாக நான்கு வழிச்சாலைகள் அமைக்கும் பணி நடக்கிறது. ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநகராட்சி தயக்கம் காட்டுவதால் இந்தச் சாலையும் தொடர்ச்சியாக இல்லாமல் முழுமையடையாமல் உள்ளது. தொடர்ச்சியாக இந்தச் சாலையை அமைக்காவிட்டால் மக்கள் இந்தச் சாலையை முழுமையாகப் பயன்படுத்த இயலாத நிலை ஏற்படும்.

தற்போது ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் வைகை ஆற்றின் குறுக்கே இருந்த தரைப்பாலங்களை இடித்துவிட்டு ஒபுளாபடித்துரையில் ரூ.23 கோடியில் புதிய உயர்மட்ட மேம்பாலம் கட்டும் பணியும், குருவிக்காரன் சாலை சந்திப்பு பகுதியில் ரூ.23.17 கோடி மதிப்பீட்டில் உயர்மட்டப் பாலம் கட்டுமானப் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

குருவிக்காரன்சாலை தரைப்பாலம் இடிக்கப்பட்டு புதிய பாலம் கட்டும்போது அதன் அருகிலே வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் வைகை ஆற்றைக் கடக்க வசதியாக தற்காலிகமாக மண் தரைச் சாலை அமைத்துக் கொடுத்திருந்தனர். சமீபத்தில் வைகை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் இந்தப் பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.

ஒபுளாபடித்துரையில் இந்த தரைச்சாலை கூட இல்லை. மதுரையை வைகை ஆறு வட மதுரை, தென் மதுரை என குறுக்காகச் சென்று இரண்டாகப் பிரிக்கிறது. இரு பகுதியில் வசிக்கும் மக்களும், ஒபுளாபடித்துரை தரைப் பாலம், குருவிக்காரன் சாலை தரைப் பாலம், ஏவி மேம்பாலம் மற்றும் அண்ணாநகர் பிடிஆர் பாலம் ஆகியவற்றைப் பயன்படுத்தி இரு பகுதிகளுக்கும் சென்று வந்தனர். தற்போது ஒபுளாபடித்துரை தரைப் பாலம், குருவிக்காரன் சாலை தரைப் பாலம் இடிக்கப்பட்டதால் மக்கள், வட மற்றும் தென் மதுரைப் பகுதிகளுக்குச் சென்று வருவதற்கு அண்ணா நகர் பாலம், கோரிப்பாளையம் ஏவி மேம்பாலத்தை மட்டுமே பயன்படுத்தும் நிலை உள்ளது.

இரு பாலங்களும் நகரின் வெவ்வெறு பகுதியில் அமைந்துள்ளதால் மக்களும், வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமம் அடைந்துள்ளனர். அதனால், தற்போது குருவிக்காரன் சாலை புதுப்பாலம் கட்டும் பகுதியில் மக்களும், வாகன ஓட்டிகளும் சென்று வருவதற்காக தற்காலிகமாக மண் தரைப் பாலம் அமைக்கும் பணி தற்போது நடந்து வருகிறது. இந்தத் தரைச்சாலையை வெள்ளம் அடித்துச் செல்லாமல் இருக்க சாலையின் அடிப்பகுதியில் தண்ணீர் செல்லும் வகையில் மெகா சைஸ் குழாய்கள் பதித்து அதற்கு மேல் இந்தத் தரைச்சாலை அமைக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x