

பொதுமக்களுக்குத் தேவையான சான்றிதழ்கள் வழங்கப் பணம் ஏதும் வாங்காமல் உரிய சேவையாற்றிய கிராம நிர்வாக அலுவலரின் பிறந்த நாளைக் கிராம மக்கள் மரக்கன்றுகள் நட்டும், பரிசுப் பொருட்களை வழங்கியும் கொண்டாடினர்.
தஞ்சாவூர் அருகே வல்லம் புதூர் கிராம நிர்வாக அலுவலராகப் பணியாற்றுபவர் பி.செந்தில்குமார் (46). இவர் இந்தியக் கடற்படையில் பணியாற்றி ஓய்வு பெற்றபின், கிராம நிர்வாக அலுவலராகப் பணியில் சேர்ந்து பணியாற்றி வருகிறார்.
கிராமத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் தேவையான சான்றிதழ்களை உரிய நேரத்தில் வழங்குவது, கிராம மக்களிடம் எளிதில் பழகுவது, அவர்களை அலைக்கழிக்காமல் உரிய சேவைகளை வழங்குவது, கஜா புயல், கரோனா நிவாரணப் பொருட்களைத் தன்னுடைய சொந்தச் செலவில் வழங்கியது, ஓய்வூதியம் பெரும் முதியோருக்குத் தன்னுடைய செலவில் அரிசி வழங்குவது எனத் தொடர்ந்து சேவை செய்து வருகிறார்.
இந்த கிராமத்துக்குப் பணிபுரிய வந்து மூன்றாண்டுகள் நிறைவடைந்ததால் அவருக்கு, அவருடைய பிறந்த நாளான இன்று குருவாடிப்பட்டி கிராம மக்கள் பாராட்டு தெரிவித்து, கொண்டாடினர்.
இதுகுறித்து வல்லம் புதூர் வருவாய் கிராமத்துக்குட்பட்ட குருவாடிப்பட்டி மாதாகோயில் தெருவைச் சேர்ந்த லெனின் கூறும்போது, ''எங்களது கிராமத்தில் எத்தனையோ கிராம நிர்வாக அலுவலர்கள் பணியாற்றினர். ஆனால், கடந்த மூன்று ஆண்டுகளாக எங்களது கிராமத்தில் பணியாற்றி வரும் செந்தில்குமார், முழுமையாக அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றி வருகிறார்.
கஜா புயல் பாதிக்கப்பட்டவுடன் உடனடியாக ஊருக்கு வந்து பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான உதவியைச் செய்தார். அதேபோல் கரோனா ஊரடங்கு காலத்தில் அரிசி, மளிகைப் பொருட்களைத் தனது சொந்தச் செலவில் வழங்கினார். எங்களது கிராமத்தில் வீடு இல்லாவர்களுக்கு வீட்டு மனைப் பட்டாவும், முதியோர், விதவைகள் என ஏராளமானோருக்கு உதவித்தொகையும் பெற்றுத் தந்துள்ளார். முதியோர் உதவித்தொகை பெறுவோருக்கு ரேஷனில் அரிசி கிடையாது என்பதால், தன்னுடைய செலவில் மாதந்தோறும் அரிசி வாங்கிக் கொடுத்து வருகிறார்.
இப்படி எங்களில் ஒருவராக இருக்கும் கிராம நிர்வாக அலுவலர் மூன்றாண்டுகளில் வேறு ஊருக்கு மாற்றலாகிவிடுவார் என்பதால், அவருடைய பிறந்த நாளை இன்று (ஜூலை 7-ம் தேதி) சிறப்பாகக் கொண்டாடினோம். மேலும் கிராமத்தில் மரக்கன்றுகளையும் அவர் நினைவாக நட்டுள்ளோம். பெண்கள் பலரும் அவருக்குப் பிறந்த நாள் பரிசுப் பொருட்களைக் கொடுத்தும், கும்மியடித்தும் வாழ்த்தினர்'' என்று தெரிவித்தார்.
இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமார் கூறுகையில், ''ஏழை, எளிய மக்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து வருகிறேன். நான் கடற்படையில் 20 ஆண்டுகள் பணியாற்றி, விருப்ப ஓய்வு பெற்று இந்தப் பணியில் சேர்ந்துள்ளேன். ஏற்கெனவே விளார் கிராமத்தில் பணியாற்றியபோது அங்கு 500 பேருக்கு இலவச வீட்டு மனைப் பட்டாவை வழங்கினேன். தற்போது இந்த கிராமத்தில் உள்ளவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறேன், இந்த கிராம மக்கள் எனது பிறந்த நாளைக் கொண்டியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது'' என்று தெரிவித்தார்.