Published : 07 Jul 2021 04:07 PM
Last Updated : 07 Jul 2021 04:07 PM

சரியும் மேட்டூர் நீர்மட்டம்; கர்நாடகத்திடம் காவிரி நீரைக் கேட்டுப் பெற வேண்டும்: ராமதாஸ்

ராமதாஸ்: கோப்புப்படம்

சென்னை

மேட்டூர் நீர்மட்டம் சரிந்து வரும் நிலையில், கர்நாடகத்திடம் காவிரி நீரைக் கேட்டுப் பெற வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, ராமதாஸ் இன்று (ஜூலை 07) வெளியிட்ட அறிக்கை:

"காவிரிப் பாசன மாவட்டங்களில் குறுவைப் பருவ நடவுப் பணிகள் கூட இன்னும் நிறைவடையாத நிலையில், மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 77.29 அடியாகக் குறைந்திருக்கிறது. குறுவை நெல் சாகுபடிக்கு இன்னும் குறைந்தது 100 நாட்களுக்காவது தண்ணீர் தேவைப்படும் நிலையில், நீர்மட்டம் குறைந்திருப்பதும், கர்நாடக அரசு உரிய அளவு தண்ணீர் வழங்காததும் கவலையளிக்கிறது.

காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக கடந்த மாதம் 12-ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது. தொடர்ந்து, இரண்டாவது ஆண்டாக மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டதாலும், அப்போது அணையில் 96.80 அடி நீர் இருந்ததாலும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

கடந்த ஆண்டுகளை விட அதிகமாக நடப்பாண்டில் 5.20 லட்சம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்யவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

காவிரி பாசன மாவட்டங்களின் அனைத்துப் பகுதிகளுக்கும் தண்ணீர் சென்றடைய வசதியாக அணையிலிருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவை அதிகரிக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி வந்த நிலையில், நீர்வரத்து குறைந்ததால் அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு நேற்று முதல் விநாடிக்கு 15,000 கன அடியிலிருந்து 12,000 கன அடியாகக் குறைக்கப்பட்டிருக்கிறது.

ஜூன் மாதத்தின் பிற்பகுதியில் காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை தீவிரம் அடையும்; அதனால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எதிர்பார்த்த அளவுக்குப் பருவமழை பெய்யவில்லை. ஓரளவு மழை பெய்ததால், கிடைத்த தண்ணீரையும் கர்நாடகம் அதன் தேவைக்காகத் தேக்கிவைத்துக் கொண்டதால் மேட்டூர் அணைக்கு நீர் வரவில்லை.

குறுவைப் பாசனத்திற்காக மேட்டூர் அணை திறக்கப்பட்டபோது, அணையின் நீர்மட்டம் 96.80 அடியாக இருந்தது. அணை திறக்கப்பட்டு 25 நாட்கள் ஆகிவிட்ட நிலையில், அணையின் நீர்மட்டம் இன்று காலை 77.29 அடியாக, அதாவது 39.30 டிஎம்சியாகக் குறைந்து விட்டது. அணைக்கு வரும் நீரின் அளவும் விநாடிக்கு 1,000 கன அடிக்கும் கீழாகக் குறைந்துவிட்டது.

மேட்டூர் அணையில் இருக்கும் தண்ணீரைக் கொண்டு ஜூலை மாத இறுதி வரை கூட தண்ணீர் வழங்க முடியாது. விநாடிக்கு 12,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டால், ஒரு நாளைக்கு ஒரு டிஎம்சி தண்ணீர் செலவாகும். ஜூலை இறுதி வரை தண்ணீர் திறக்க 24 டிஎம்சி தண்ணீர் தேவை. மேட்டூர் அணையின் நீர் இருப்பு 15 டிஎம்சிக்கும் கீழ் குறைந்துவிட்டால் அணையிலிருந்து பாசனத்திற்காகத் தண்ணீர் திறக்க முடியாது.

குறுவை சாகுபடி முழுமையடைய அக்டோபர் மாதம் வரை ஆகும். அக்டோபர் மாத இறுதியில்தான் வடகிழக்குப் பருவமழை தொடங்கும். அதுவரை 100 நாட்களுக்கும் மேலாக மேட்டூர் அணையின் தண்ணீரைக் கொண்டுதான் காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை சாகுபடி செய்யப்பட வேண்டும்.

ஆனால், இப்போதிருக்கும் தண்ணீர் அடுத்த 25 நாட்களுக்குக் கூட போதுமானதல்ல என்பதால், காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை நெற்பயிர்களைக் காப்பாற்ற முடியாத நிலை ஏற்படக்கூடும்.

காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை பயிரைக் காப்பாற்ற வேண்டுமானால், கர்நாடகத்திடமிருந்து தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய தண்ணீரைப் பெறுவதுதான் ஒரே வழியாகும். காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, ஜூன் மாதத்திற்கு 9.10 டிஎம்சி, ஜூலை மாதத்திற்கு 31.24 டிஎம்சி என, மொத்தம் 40.43 டிஎம்சி தண்ணீரை இம்மாத இறுதிக்குள் கர்நாடகம் தமிழகத்திற்கு வழங்க வேண்டும்.

ஆனால், ஜூலை மாதத்தில் இதுவரை ஒரு டிஎம்சி தண்ணீரைக் கூட கர்நாடகம் இன்னும் வழங்கவில்லை. கர்நாடகத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கிருஷ்ணராஜசாகர், கபினி, ஹாரங்கி, ஹேமாவதி ஆகிய 4 அணைகளிலும் சேர்த்து இன்று காலை நிலவரப்படி 62.58 டிஎம்சி தண்ணீர் உள்ளது.

கர்நாடகத்தில் இப்போதைக்கு பாசனத்திற்காகத் தண்ணீர் தேவையில்லை என்பதால், அங்குள்ள அணைகளில் இருந்து தமிழகத்திற்குத் தண்ணீர் திறந்துவிட எந்தத் தடையுமில்லை.

காவிரி பாசன மாவட்ட விவசாயிகள் கடந்த 2012-ம் ஆண்டில் தொடங்கி 2019-ம் ஆண்டு வரை தொடர்ந்து 8 ஆண்டுகளாக குறுவை சாகுபடியை வெற்றிகரமாகச் செய்ய முடியவில்லை. கடந்த ஆண்டு மட்டும்தான் உரிய காலத்தில் மேட்டூர் அணை திறக்கப்பட்டு, தொடர்ந்து நீர் வழங்கப்பட்டதால், 4 லட்சம் ஏக்கருக்கும் கூடுதலான பரப்பில் குறுவை சாகுபடி செய்து லாபம் ஈட்டினார்கள்.

நடப்பாண்டும் குறுவை சாகுபடி வெற்றிகரமாக அமையும் என்று அவர்கள் நம்பிக் கொண்டிருக்கும் நிலையில், அவர்களின் நம்பிக்கையை இயற்கையும், கர்நாடக அரசும் சிதைப்பதற்கு அனுமதிக்கக் கூடாது.

எனவே, மத்திய அரசு, காவிரி மேலாண்மை ஆணையம் என எந்தெந்த வழிகளில் அழுத்தம் தர முடியுமோ, அனைத்து வழிகளிலும் அழுத்தம் கொடுத்து, ஜூன், ஜூலை மாதங்களுக்கு வழங்க வேண்டிய தண்ணீரைக் கர்நாடக அரசு காவிரியில் திறந்து விடுவதைத் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். அதன்மூலம் காவிரி பாசன மாவட்ட விவசாயிகளின் குறுவைப் பயிர்களைக் காப்பாற்ற வேண்டும்".

இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x