Last Updated : 07 Jul, 2021 03:52 PM

 

Published : 07 Jul 2021 03:52 PM
Last Updated : 07 Jul 2021 03:52 PM

தமிழகத்தில் அதிகரிக்கும் குழந்தைத் திருமணங்கள்: பெண் குழந்தைகள் பாதுகாப்பில் தமிழகம் பின்னோக்கிச் செல்கிறதா?

படம்: விஜயபாஸ்கர்

2018ஆம் ஆண்டு தனக்கு நடக்கவிருந்த குழந்தைத் திருமணத்தைத் தடுத்த நிறுத்திய திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 14 வயதுச் சிறுமி நந்தினி அனைவராலும் பாராட்டப்பட்டார். அவரின் தைரியத்துக்கு ஊக்கமளிக்கும் வகையில் முதலமைச்சர் விருது வழங்கி கவுரவித்தது தமிழக அரசு.

ஆனால், மதுரையைச் சேர்ந்த 17 வயதுச் சிறுமிக்கு நிகழ்ந்தது வேறு.

மதுரை பாண்டியகோவிலைச் சேர்ந்த 17 வயதுச் சிறுமி கடந்த மாதம் தனக்கு நடக்கவிருந்த திருமணத்தைத் துணிச்சலாகக் காவல் நிலையத்துக்குத் தெரிவித்து திருமணத்தை நிறுத்தினார்.

சிறுமியின் தைரியத்துக்காக அவர் பரவலாக பாராட்டப்பட்டார். இந்தப் பாராட்டுகளுக்கிடையே தனது பாட்டியின் வீட்டில் தங்கி இருந்த சிறுமியை, அவரது பெற்றோர்கள் மீண்டும் தங்கள் வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இரண்டு நாட்களில் சிறுமி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

சிறுமியின் மரணம் தொடர்பாக எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் போலீஸார் இந்த வழக்கை விசாரணை செய்து வருகின்றனர்.

திருமணத்தை நிறுத்திய சிறுமி ஏன் தற்கொலையை தேர்வு செய்தார் ? வாழ்வை முடித்துக் கொள்ளும் முடிவுக்கு அவரைத் தள்ளியது எது? நவீனமயமான இந்த நூற்றாண்டிலும் குழந்தைத் திருமணங்களை ஏன் இன்னமும் முற்றிலுமாக ஒழிக்க முடியவில்லை எனப் பல கேள்விகளை அச்சிறுமியின் மரணம் எழுப்பி இருக்கிறது.

சிறுமி மரணித்துவிட்டார், ஆனால் அவரைத் தற்கொலைக்குத் தூண்டிய, அதே அச்சத்துடன் தமிழகத்தின் எங்கோ ஒரு மூலையில் நாட்களை நகர்த்திக் கொண்டிருக்கும் சிறுமிகளைக் காக்க நாம் என்ன செய்யப் போகிறோம்?

கரோனா நெருக்கடியால் 2020ஆம் ஆண்டு மே மாதத்தில் மட்டும், தமிழகத்தில் குழந்தைகள் திருமணம் 40% அதிகரித்துள்ளதாக சிஆர்ஒய் (CRY) நடத்திய ஆய்வின் முடிவில் கூறப்பட்டது. சேலம், திண்டுக்கல், ராமநாதபுரம், தருமபுரி, ராமநாதபுரம் மாவட்டங்களிலும், 72 பழங்குடி கிராமங்களிலும் தொடர்ந்து குழந்தைத் திருமணங்கள் அதிகரித்துள்ளதாக அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து ஏராளமான செய்திகளும், விழிப்புணர்வுக் கட்டுரைகளும் குழந்தைத் திருமணங்கள் தொடர்பாக வெளிவந்தன. இதன் காரணமாக சிலநாட்கள் குழந்தைத் திருமணம் தொடர்பான விவாதங்கள் பொதுவெளியில் எழுந்து அடங்கின. ஆனாலும், மீண்டும் குழந்தைத் திருமணங்கள் நடக்கத் தொடங்கிவிட்டன.

இந்த தருணத்தில்கூட தமிழகத்தின் ஏதேனும் பின்தங்கிய பகுதிகளில் குழந்தைத் திருமணங்கள் நடந்துகொண்டு இருக்கலாம். பல ஆண்டுகளாக குழந்தைத் திருமணங்களுக்கு எதிரான விழிப்புணர்வுக் குரல்கள் தொடர்ந்து எழுப்பப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. ஆனால், அதற்கான தீர்வு இன்றுவரை எட்டப்படாமலே உள்ளது. காரணம் குழந்தைத் திருமணங்களுக்கு மூல காரணமாக இருப்பது நமது சமூகக் கட்டமைப்பு. குழந்தைத் திருமணங்களை ஊக்குவிக்கும் நமது இந்தியச் சமூக அமைப்பு ஆணி வேரைப் போன்றது. இந்த ஆணி வேரில் மதம், சாதி, வறுமை, பாலினப் பாகுப்பாடு என பல பிரிவுகள் உள்ளன. இப்பிரிவுகளில் அழுத்தத்தை கொடுப்பதன் மூலமே ஆணி வேரில் தளர்வை ஏற்படுடுத்த முடியும்.

கரோனாவும், குழந்தைத் திருமணமும்:

கரோனா காலத்தில் மட்டும்தான் குழந்தைத் திருமணங்கள் அதிக அளவில் நடைபெற்றதா? இல்லை. கரோனாவுக்கு முன்னரும், குழந்தைத் திருமணங்கள் நமது சமூகத்தில் நடந்துகொண்டுதான் உள்ளன. ஆனால், அதன் எண்ணிக்கை அங்கொன்றும், இங்கொன்றுமாக இருந்தது. கரோனாவால் இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்றுதான் கூறவேண்டும். அவ்வளவுதான். இந்த அதிகரிப்புக்கு முக்கியக் காரணமாக இருப்பது பள்ளிகள் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக இயங்காமல் இருப்பது. கல்வி சரியாகக் கிடைக்காதபோதும், கல்வி பெறுவது பாதிக்கப்படும்போதும் குழந்தைத் திருமணங்கள் அதிகரிக்கின்றன. ஆண்டாண்டு காலமாக இதுதான் நடந்து கொண்டிருக்கிறது. கரோனாவின்போது அதுதான் எதிரொலித்திருக்கிறது.

பள்ளிக் கூடங்கள் இயக்கத்தில் இருந்தால் ஒரு சிற்றூரில் நடக்கும் குழந்தைத் திருமணம் குறித்த தகவல் முன்கூட்டியே அறியப்பட்டு அவற்றைத் தடுத்து நிறுத்த வாய்ப்புகள் அதிகம். கரோனா காரணமாகப் பள்ளிகள் கடந்த ஒன்றை வருடங்களாகவே திறக்கப்படவில்லை. விளைவு ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் இடையேயான பிளவு அதிகரித்துள்ளது. இந்தப் பிளவு கிராமப் புறங்களிலும், பொருளாதாரத்தில் பின்தங்கிய பகுதிகளிலும் குழந்தைத் திருமணங்களாக நடைபெற வழிவகுத்துள்ளன.

அதுமட்டுமல்லாது பெற்றோரை இழந்தை இல்லங்களில் உள்ள குழந்தைகளின் பாதுகாப்பைச் சுட்டிக் காட்டி அவர்களின் உற்றார் உறவினர்களும் கொடுக்கும் அழுத்தமும் குழந்தைத் திருமணத்திற்கு காரணமாகியுள்ளது.

குழந்தைத் திருமணங்கள் அதிகம் நடைபெறும் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், பிஹார், ஜார்க்கண்ட், ஆந்திரா, மேற்கு வங்கம்,அசாம், திரிபுரா ஆகிய மாநிலங்களில் குழந்தைத் திருமணத்திற்கு எதிராக எத்தகைய ஆழமான பிரச்சாரங்கள் இருக்கின்றன. அதே பிரச்சாரங்கள் தமிழகத்துக்கு வேண்டி உள்ளது என்பதை கரோனா உணர்த்தி உள்ளது.

குழந்தைத் திருமணங்கள் குற்றச் செயலாகப் பார்க்கபடுவதில்லை: கருப்பசாமி, ஈரோடு மாவட்டம், குழந்தைத் திருமணத் தடுப்புச் செயற்பாட்டாளர்

”கோவிட் காலகட்டத்தில் குழந்தைத் திருமணங்கள் அதிகரித்துள்ளன. வழக்கமாகவே மலைப் பிரதேச மாவட்டங்களின் உட்பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு அரசின் கல்வி சார்ந்த சலுகைகளோ, திட்டங்களோ அவ்வளவாக வந்தடைவதில்லை. மேல்நிலைப் பள்ளிகளும், கல்லூரி மேற்படிப்புகள் தூரமாக அமைந்துள்ளதால் பெரும்பாலான குழந்தைகளின் பள்ளிப்படிப்பைப் பாதியிலேயே நிறுத்திவிடுகின்றனர். இதன் காரணமாகவே குழந்தைத் திருமணங்கள் அதிகரிக்கின்றன.

ஈரோட்டைப் பொறுத்தவரை கடம்பூர், தாளவாடி போன்ற பகுதிகளில் குழந்தைத் திருமணங்கள் அதிக அளவில் நடக்கின்றன. காக்கும் கரங்கள் சார்பாகத் தொடர்ந்து குழந்தைத் திருமணங்கள் தொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வைக் கொண்டு சென்று வருகிறோம்.

குழந்தைத் திருமணங்களை இப்பகுதிகளில் உள்ள மக்கள் குற்றச் செயலாகவே பார்ப்பதில்லை. இவர்களைப் பொறுத்தவரை காதல் திருமணங்கள்தான் குற்றச் செயல். அவைதான் குற்றம்.

பெண் பிள்ளைகள் தங்கள் மேற்படிப்பைத் தேர்வு செய்யும்போதுதான் அவர்களின் திருமணங்கள் தள்ளிப் போவதற்கான ஒரே வழி. இல்லையேல் ஒன்பதாம், பத்தாம் வகுப்புடன் பள்ளிப் படிப்பை நிறுத்திவிட்டு பக்கத்தில் உள்ள நூற்பாலைகளில் சில மாதங்கள் வேலை செய்து பின்னர் திருமணத்துக்குத் தயாராகிவிடுகிறார்கள். பொருளாதாரத்தில் பின்தங்கிய அனைத்துக் குடும்பங்களிலும் இது நடக்கிறது.

குழந்தைத் திருமணங்களை நிறுத்துவதைவிட, திருமணத்துக்குப் பிறகு அத்திருமணங்களைக் கண்டறிவதும், அதற்கான தண்டனைகளைப் பெற்றுத் தருவதும்தான் சவாலானதுதான்.

இதில் சிக்கல் என்னவென்றால் திருமணமான சிறிது நாட்களில் சில பெண்கள் கர்ப்பம் அடைந்து விடுகின்றனர். அவ்வாறு இருக்கும்போது கருக்கலைப்பு செய்ய வேண்டும் என்று சட்டம் சொல்கிறது. ஆனால், குடும்பங்கள் குழந்தையைத்தான் கருவியாகப் பயன்படுத்துகின்றனர். அவர்களுக்கு குழந்தைத் திருமணங்களில் இருக்கும் உண்மை, பிரச்சினைகள் புரிவதில்லை. மக்களிடம் தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலம்தான் குழந்தைத் திருமணங்களைத் தடுக்க முடியும்”

நகரங்களிலும் தொடரும் குழந்தைத் திருமணம்: தேவநேயன்

”இந்திய சமூகக் கட்டமைப்பைப் பொறுத்தவரை குழந்தைத் திருமணம் என்பது, எல்லாக் காலத்திலும் இருந்திருக்கிறது. எல்லா பேரிடர்களுக்குப் பின்னும் குழந்தைகள் மீதான வன்முறை அதிகரித்துள்ளது. பெண் குழந்தைகளுக்குப் பாதுகாப்பு இல்லாதபோது குழந்தைத் திருமணங்கள் அதிக அளவில் நடக்கின்றன. இரண்டாவது பாரம்பரியம். ஒரு பெண் பூப்பெய்துவிட்டால் அவள் திருமணத்துக்குத் தயாராகிவிட்டதாக இந்தியச் சமூகம் நம்புகிறது. இதனை மத ரீதியாகவும் ஏற்றுக் கொள்கிறார்கள், இன ரீதியாகவும் ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனால், இந்த மனநிலைஆண் குழந்தைகளிடம் இல்லை.

மலைவாழ் கிராமங்களில் வசிக்கும் மக்களின் குழந்தைகள் அவர்கள், பகுதியில் 1 – 8 வகுப்பு வரையில் உள்ள பள்ளியில் படிக்கிறார்கள் என்றால், 8ஆம் வகுப்புடன் அந்தக் குழந்தைகளின் பள்ளிப்படிப்பு நிறுத்தப்படுகிறது. பெண் குழந்தைகளின் பாதுகாப்பு கருதி தூரமான பள்ளிக் கூடங்களுக்கு அவர்களை அனுப்ப பெற்றோர்கள் தயாராக இல்லை. அவ்வாறு இருக்குபோது பள்ளிப் படிப்பு தடைப்பட்டு அது திருமணத்தில் முடிகிறது. இந்தக் குழந்தைத் திருமணங்களின் பின்னணியில் முக்கியக் கருவியாகச் சாதியமும் செயல்படுகிறது. தன் பெண் வேறு சாதியைச் சேர்ந்தவரைத் திருமணம் செய்துகொள்ளப் போகிறாரா என்ற அச்சம் பெற்றோர்களிடம் உள்ளது.

கிராமங்களில் மட்டுமல்ல சென்னையின் புறநகர்ப் பகுதிகளான கண்ணகி நகரில் கூட குழந்தைத் திருமணங்கள் நடைபெறுகின்றன.

சிறுவயதில் திருமணம் முடிந்தால் வரதட்சணைக் குறைவு போன்ற பல காரணங்கள் குழந்தைத் திருமணங்களுக்குப் பின்னால் இருக்கின்றன. இவை எல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். தமிகத்தில் உள்ள குழந்தைகள் நல ஆணையமும், குழந்தை நல அமைப்புகளும் குழந்தைத் திருமணங்கள் நடைபெறாமல் இருக்க என்ன செய்துள்ளனர்? இக்கரோனா காலத்தில் தமிழகத்தில் குழந்தை நல உரிமைகள் அமைப்பு என்ன செய்தது?

இந்த ஆண்டில் இவ்வளவு குழந்தைகள் திருமணங்கள் நடந்துள்ளன என்று டேட்டா கொடுப்பது மாவட்டக் குழந்தை நல அமைப்புகளின் பணியா நிச்சயம் இல்லை.

குழந்தைத் திருமணச் சட்டத்தைத் தமிழகத்தை முறையாக இவர்கள் அமல்படுத்துகிறார்களா? 2000ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் கிராம அளவில் குழந்தைகளுக்கான நல அமைப்புகளை உருவாக்க வேண்டும் என்று தீர்ப்பளிக்கிறது. தமிழகத்தில் உடனடியாக அப்போது அந்த அமைப்புகள் உருவாக்கப்படவில்லை. ஆனால் 2012ஆம் ஆண்டில்தான் ஒருங்கிணைந்த குழந்தை பாதுகாப்புக்குத் தமிழக அரசு நிதி ஒதுக்கியது.

இவர்கள்தான் தமிழகத்தில் கிராம குழந்தைகள் பாதுகாப்புக் குழு உருவாக்கிவிட்டதாகக் கூறுகிறார்கள். அவர்கள் கூறுவது நிஜத்திலா? பேப்பரிலா?

தமிழகத்தின் குழந்தைகளுக்கான அமைப்புகள் முறையாகச் செயல்பட்டால் குழந்தைத் திருமணங்கள் நடப்பதற்கு வாய்ப்பு மிகக் குறைவு. தமிழகத்தில் இயங்கும் குழந்தைகள் உரிமை ஆணையத்தில் அரசியல் தலையீடுகள் உள்ளன. நிதியும் சரியாக வழங்கப்படுவது இல்லை. குழந்தைகள் மீதான வன்முறைகள் குறித்த எந்த தரவுகள் சரியாக இருப்பது இல்லை. இந்த செயல்பாடுகளில் உடனடி மாற்றம் வேண்டும் இல்லையேல் குழந்தைகளுக்கான பாதுகாப்பற்ற மாநிலமாகத்தான் தமிழகம் இருக்கும்”

சமூக மாற்றம், பொருளாதார மாற்றம் தேவை

பெண் குழந்தைகள் மீதான பொதுப்புத்தி மாற வேண்டும். பெண் குழந்தைகள் சுமைகள் அல்ல. பெண் குழந்தைகளுக்கான வாழ்வியல் இலக்கு திருமணம் மட்டும்தான் என்ற நிலைப்பாட்டில் பெற்றோர்களுக்குள் மாற்றம் ஏற்பட வேண்டும்.

அந்த மாற்றம் பெண்களின் அதிகாரங்கள் வலுவடையும்போதே எழும். குழந்தைத் திருமணம் என்பது இந்தியச் சமூகம் ஆண்டாண்டு காலமாகத் தொடர்ந்து வரும் சமூகக் குற்றம் என்பதை குடும்பங்கள் உணர வேண்டும். ஆண் பிள்ளைகளின் படிப்புக்காகச் சேமிக்கும் பெற்றோர்கள், பெண் குழந்தைகளுக்குத் திருமணத்துக்காகவே தங்களது சேமிப்பைத் தொடங்குகின்றன.

ஆகையால்,பெண் பிள்ளைகள் பொருளாதார ரீதியாக யாரையும் சார்திருக்காத நிலையை அடைவதற்கு உரிய சமூக திட்டங்களை அரசு இன்னும் கூடுதல் கவனம் எடுத்து மேம்படுத்த வேண்டும்.

திருமணத்துக்காகவே ஒரு பெண் பிறக்கிறாள், திருமணமும், தாய்மையும்தான் ஒரு பெண்ணை முழுமையாக்கிறது போன்ற பிற்போக்குக் கற்பிதங்கள் உடைக்கப்பட்டு பெண்கள் அதிகாரப்படுத்தப்பட வேண்டும்.

குழந்தைத் திருமணங்களை தடுப்பது இயக்கமாக மாற வேண்டும்

2018 ஆம் ஆண்டு யுனிசெஃப் குழந்தைத் திருமணங்கள் சார்ந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில் கடந்த பத்து ஆண்டுகளில் தெற்காசியாவில் குழந்தைத் திருமணங்கள் குறையத் தொடங்கியுள்ளதைக் குறிப்பிட்டு இருந்தது. இது ஆரோக்கியமான செய்திதான். இருப்பினும் அதில் 2030ஆம் ஆண்டு இறுதிக்குள் தெற்காசியாவில் மேலும் 12 கோடி குழந்தைகளுக்குத் திருமணம் நடைபெறும் என்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. உண்மையில் யுனிசெஃப் கூறிய இந்த எண்னிக்கை இரட்டிப்பாகும் சூழலைதான் கரோனா ஏற்படுத்தியுள்ளது.

இவற்றை எல்லாம் கவனத்தில் கொண்டு குழந்தைத் திருமணங்களைத் தடுப்பது இயக்கமாக மாற வேண்டும். கடந்த ஓராண்டில் பள்ளிப் படிப்பைப் பாதியிலேயே நிறுத்திய மாணவ, மாணவிகளைக் கண்டறிந்து அவர்கள் மீண்டும் பள்ளிகளில் பயில நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

இதற்கான சிறப்புக் குழுவை அரசு உடனடியாக அமைக்க வேண்டும். குழந்தைத் திருமணங்களுக்கான எதிர்வினைகளை பள்ளிகளில் ஆழமாகப் படர வேண்டும். பள்ளிகளே குழந்தைத் திருமணங்களை நிறுத்துவதற்கான ஆயுதம். பெண் கல்வியை ஊக்குவிக்க கொண்டுவரப்பட்ட திட்டங்களுக்கு கடந்த கால ஆட்சியில் சரியாக நிதி ஒதுக்கவில்லை என்ற முக்கிய குற்றச்சாட்டை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைகள் துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்திருக்கிறார். இந்தக் குறைபாடுகள் உடனடியாக களையப்பட வேண்டும்.

குழந்தைத் திருமணங்களுக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரங்கள் எல்லா ஊடகங்கள் வழியாகவும் சென்றடைய வேண்டும்.

குழந்தை திருமணங்களை தடுப்பதற்காக அரசி அளித்துள்ள வாக்குறுதிகளை வீரியமாகவும், விரைவாகவும் செயல்படுத்த வேண்டும். அதுமட்டுமே தற்போதைய சூழலில் பெண் குழந்தைகளின் எதிர்காலக் கனவுகளை நனவாக்கும்.

பெண் குழந்தைகளும், அவர்களின் கனவுகளும் கொண்டாட்டத்துக்கு உரியவை… கொண்டாடுங்கள்…

குழந்தைத் திருமணம் எங்கும் இனி நடக்க வேண்டாம், எந்தச் சிறுமியும் இறக்க வேண்டாம்…!

தொடர்புக்கு: indumathy.g@hindutamil.co.in

* லாட்லி ஊடகக் கூட்டாய்வுக்காக எழுதப்பட்ட கட்டுரை.

இக்கட்டுரையில் உள்ள கருத்துகள் அனைத்தும் கட்டுரையாளரின் பார்வை மட்டுமே. இதில் கூறப்பட்டுள்ள கருத்துகளுக்கும் லாட்லி (Laadli ) மற்றும் யுஎன்ஹெப்பிஏவுக்கும் (UNFPA) தொடர்பில்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x