

பாஜகவுடன் கூட்டணி வைத்ததால், சிறுபான்மையினர் வாக்குகளை இழந்தோம் எனவும், தேர்தலில் தோல்வியைச் சந்தித்தோம் எனவும், அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். இதற்கு, பாஜகவினர் எதிர்வினையாற்றி வருகின்றனர்.
வானூர் ஒன்றிய அதிமுக சார்பில், உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் வானூர் பகுதியில் நேற்று (ஜூலை 06) மாலை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் முன்னாள் சட்டத்துறை அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான சி.வி.சண்முகம் பங்கேற்றுப் பேசியதாவது:
"பாஜகவுடன் கூட்டணி வைத்த காரணத்தால் சிறுபான்மையினரின் வாக்குகளை நாம் முழுமையாக இழந்துவிட்டோம். உதாரணமாக, விழுப்புரம் தொகுதியில் முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ சமுதாயத்தைச் சேர்ந்த சிறுபான்மையினருக்கு சுமார் 20 ஆயிரம் வாக்குகள் உள்ளன. அதில், 18 ஆயிரம் வாக்குகள் விழுப்புரம் நகரத்தில் உள்ளன. விழுப்புரம் நகரத்தில் மட்டும் 16 ஆயிரம் வாக்குகள் குறைந்துள்ளன.
முந்தைய அதிமுக ஆட்சி மீது மக்களுக்குக் கோபம் கிடையாது. பொதுவாகவே, கடந்த 10 ஆண்டு காலமாக மக்களுக்கு நல்ல திட்டங்களைக் கொண்டுசென்ற காரணத்தினால், மக்கள் மத்தியில் நல்ல பெயர் இருந்தது. இந்த ஆட்சி வரவேண்டும் என்று வாக்களிக்கத் தயாராக இருந்தார்கள்.
ஆனால், கணக்கு சரியில்லை. கூட்டணிக் கணக்கு, சிறுபான்மையினர் வாக்கு மற்றும் சில காரணங்களால் நாம் இந்தத் தோல்வியைச் சந்திக்க நேர்ந்தது. இதுபோன்று இல்லை என்றிருந்தால், இன்றைக்கு திமுக ஆட்சியில் வந்திருக்காது. அப்படியே தவறி அவர்கள் ஆட்சிக்கு வந்திருந்தாலும் கூட்டணி ஆட்சிதான் வைத்திருக்க முடியும்.
ஆகவே, இதில் நம்முடைய குறையும் இருக்கிறது. ஏதோ அவர்கள் வெற்றி பெற்றுவிட்டார்கள், மக்கள் அவர்களுக்கு அமோகமாக ஆதரவு தந்துவிட்டார்கள் என்று நினைக்கவேண்டாம்".
இவ்வாறு சி.வி.சண்முகம் தெரிவித்தார்.
இதற்கு, பாஜக மாநிலப் பொதுச் செயலாளர் கே.டி.ராகவன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, அவர் இன்று (ஜூலை 07) தன் ட்விட்டர் பக்கத்தில், "உங்களால்தான் என்ற எண்ணம் எங்களிடமும் உண்டு" என்று பதிவிட்டுள்ளார்.
அதேபோல், பாஜக நிர்வாகி எஸ்.ஆர்.சேகர் தன் ட்விட்டர் பக்கத்தில், "சி.வி.சண்முகம் கருத்தை ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஏற்கிறார்களா? பதில் சொல்ல வேண்டும். இல்லையெனில், நடவடிக்கை எடுக்க வேண்டும். 87,403 ஓட்டுப் போட்ட மெஜாரிட்டி மக்களை அவமானப்படுத்திய சி.வி.சண்முகம் மன்னிப்பு கேட்க வேண்டும்" எனப் பதிவிட்டுள்ளார்.