Last Updated : 07 Jul, 2021 03:12 AM

 

Published : 07 Jul 2021 03:12 AM
Last Updated : 07 Jul 2021 03:12 AM

எதிர்க்கட்சியாக இருந்தால் கருத்து சுதந்திரம்.. ஆளுங்கட்சியானால் கைது செய்வதா?- விமர்சனத்துக்கு உள்ளாகும் திமுக அரசின் நடவடிக்கை

சென்னை

சமூக ஊடகங்களில் அவதூறு கருத்துகளை பதிவிட்டதாக கூறி பலரும் கைது செய்யப்படுவதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. எதிர்க்கட்சியாக இருந்தால் கருத்து சுதந்திரம் பற்றி பேசுவது, ஆளும்கட்சியாக மாறிவிட்டால், விமர்சிப்பவர்களை கைது செய்வதா என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன.

கடந்த மே 7-ம் தேதி திமுக அரசுபொறுப்பேற்ற பிறகு முகநூல், ட்விட்டர், யூ-டியூப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் திமுக மற்றும் திமுக தலைவர்கள் குறித்து அவதூறு கருத்துகளை பதிவிட்டதாக பலர் கைது செய்யப்பட்டுள்ளனனர். ஒருசிலர் குண்டர் சட்டத்திலும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்ட அறிக்கையில், “சுய விளம்பரத்துக்காக ஊடகங்கள், சமூக வலைதளங்களில் அருவருப்பான, அவதூறு செய்திகளை பதிவு செய்து, சட்டம் ஒழுங்கு பிரச்சினையை சிலர்தூண்டுகின்றனர். இவ்வாறு கடந்த மேமுதல் இதுவரை சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகளை பதிவிட்ட நபர்கள் மீது 75 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் எல்லை மீறிய அளவில் அவதூறுகளை பதிவிட்ட 16 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர்’’ என்று தெரிவித்துள்ளார்.

அரசின் இந்த நடவடிக்கைக்கு பிரதான எதிர்க்கட்சியான அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

முன்னாள் முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான பழனிசாமி, “தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத அரசு குறித்தும், அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்தும் சமூக வலைதளங்களுக்கே உரிய கருத்து சுதந்திரத்தின்படி அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவினர் நியாயமான முறையில் பதிவிட்டனர். அரசை தரக்குறைவாக விமர்சிப்பதாக கூறி அவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். அதிமுகவுக்கு எதிரான இந்த அடக்குமுறையை திமுக உடனேநிறுத்தவேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.

பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதியிடம் கேட்டபோது, “எதிர்க்கட்சியாக இருக்கும்போது கருத்து சுதந்திரம் பற்றி பாடம்எடுத்த திமுகவினர், இப்போது ஆட்சிக்கு வந்ததும், ‘இம்’ என்றால் சிறைவாசம், ‘ஏன்’ என்றால் வனவாசம் என்று செயல்படுகின்றனர். சமூக ஊடகங்களில் முதல்வர், நிதியமைச்சரின் தவறுகளை சுட்டிக்காட்டியவர்களை கைதுசெய்கின்றனர். சிலர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இது கண்டிக்கத்தக்கது. திமுக முக்கியநிர்வாகிகளும், தற்போது எம்எல்ஏவாகஇருக்கும் சிலரும் பிரதமர் மோடி,மத்திய அமைச்சர்கள், பாஜக தலைவர்கள், அதிமுக தலைவர்கள் மீதுஅருவருக்கத்தக்க வகையில் விமர்சனம் செய்து வந்தனர். இப்போதும் திமுகவினர் பலர் அவதூறு பரப்புகின்றனர். அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல், திமுகவை விமர்சிப்பவர்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. திமுக ஒரு பாசிச கட்சி என்பதற்கு இதுவே உதாரணம்’’ என்றார்.

இந்த விமர்சனங்கள் குறித்து திமுகஅமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியிடம் கேட்டபோது, “ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட இயக்கம் திமுக. விமர்சனங்கள்தான் எங்களை கூர்தீட்டுகின்றன. எனவே, திமுக அரசு,திமுகவின் கொள்கைகளை விமர்சிப்பவர்கள் மீது நாங்கள் எந்த புகாரும் கூறுவது இல்லை. ஒருசிலர் வரம்புமீறி திமுக தலைவர்கள், மறைந்த தலைவர்கள் மீதுகூட எவ்வித ஆதாரமும் இன்றி அவதூறுகளையும், தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்கும் அருவருக்கத்தக்க பதிவுகளையும் பரப்புகின்றனர். பெண்கள் மீதும் அவதூறு பரப்புகின்றனர். இதனால், சமூகத்தில் அமைதியின்மை ஏற்பட்டு சட்டம் ஒழுங்கு சீர்குலையும் ஆபத்து உள்ளது. சாதி,மத மோதல்களை தூண்டும் வகையிலும் பதிவிடுகின்றனர். அப்படிப்பட்டவர்கள் மீதுதான் காவல் துறை நடவடிக்கை எடுக்கிறது. எதற்கும் ஓர் எல்லை உண்டு’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x