Last Updated : 07 Jul, 2021 03:12 AM

 

Published : 07 Jul 2021 03:12 AM
Last Updated : 07 Jul 2021 03:12 AM

ஒரு கோடி சந்தாதாரர்களை ஈர்த்த ‘உள்ளூர் சமையல்’ நிகழ்ச்சி- கிராமத்து சமையல் கலைஞர்கள் சாதனை

அறந்தாங்கி அருகே சின்ன வீரமங்களத்தில் சமையல் கலைஞர்கள் குழுவினர்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே உள்ள வீரமங்களம் ஊராட்சி சின்னவீரமங்களம் கிராமத்தைச் சேர்ந்த பட்டதாரிகள் 4 பேர் உட்பட 6 பேர் ஒன்றாக சேர்ந்து கிராமத்து முறையிலான சமையல் செய்து, அதை யூடியூப்பில் (Village cooking channel) பதிவிட்டு வருகின்றனர்.

இந்த வீடியோவைப் பார்த்த காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, கடந்த ஜன.25-ம் தேதி கரூர் தேர்தல்பிரச்சாரத்தின்போது இவர்களை கரூருக்கு வரவழைத்து அவர்களோடு சமைத்து, உணவருந்தினார்.

மேலும், தற்போது இந்த சமையல்தளத்துக்கு ஒரு கோடி பேர் சந்தாதாரர்கள் (சப்ஸ்கிரைபர்) சேர்ந்துள்ளனர். இதற்காக யூடியூப் நிறுவனம் இவர்களுக்கு டைமண்ட் விருது வழங்கி கவுரவித்துள்ளது. இதனிடையே இவர்கள் தங்களது வருமானத்தில் இருந்து ரூ.10லட்சத்தை தமிழக முதல்வரின் நிவாரண நிதிக்கு அண்மையில் வழங்கியுள்ளனர்.

இதுகுறித்து சமையல் குழுவினரில் ஒருவரான வி.சுப்பிரமணியன், ‘இந்து தமிழ்' நாளிதழிடம் கூறியது: எந்த வேலையும் கிடைக்காததால் எனது சகோதரர்கள் வி.முருகேசன், அய்யனார், உறவினர்கள் எம்.பெரியதம்பி, ஜி.தமிழ்செல்வன், டி.முத்துமாணிக்கம் ஆகியோருடன் 2018 ஏப்ரலில் இருந்து விதவிதமான உள்ளூர் சமையல் செய்யும் வீடியோக்களை யூடியூபில் பதிவிட்டு வருகிறோம்.

மற்ற வீடியோக்களைவிட ஈசல், வயல் நண்டு ரசம், நத்தை கறி சமையல் போன்ற உள்ளூர் சமையலுக்கு வரவேற்பு அதிகரித்தது. நம் தமிழர்களின் பாரம்பரிய கிராமத்து சமையலுக்கு இவ்வளவு வரவேற்பு இருப்பது எங்களுக்கு வியப்பை அளித்தது. கரூருக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வந்திருந்தபோது, எங்கள் சமையலை பார்த்து பாராட்டினார். அதன் பிறகு சப்ஸ்கிரைபர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து, தற்போது 1 கோடியை எட்டியுள்ளது. தென்னிந்தியாவில் வேறு யாரும் இதுவரை இந்த இலக்கை எட்டாததால் யூடியூப் நிறுவனம்எங்களை கடந்த வாரம் பாராட்டி விருது அளித்துள்ளது. மேலும், எங்களுக்கு கிடைத்த வருமானத்தில் இருந்து கரோனா தடுப்பு பணிக்காக ரூ.10 லட்சத்தை ஜூன் 16-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வழங்கினோம்.

எங்கள் ஊரில் இன்டர்நெட் வசதி இல்லாததால் இங்கு சமையல் செய்வதை வீடியோ எடுத்து, வெளியூருக்கு சென்றுயூடியூப்பில் அப்லோட் செய்கிறோம். இன்டர்நெட் வசதி இல்லாத ஊரில்இருந்து இந்த அளவுக்கு உயர்ந்துஇருப்பது பெருமையளிக்கிறது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x