குற்றச்சாட்டுகளில் உண்மை இல்லை: `பப்ஜி’ மதன் மனைவி விளக்கம்
சேலத்தைச் சேர்ந்த மதன் (29), அவரது மனைவி கிருத்திகா (25) ஆகியோர், ஆபாசமாகப் பேசி, தடை செய்யப்பட்ட பப்ஜி என்ற ஆன்லைன் விளையாட்டு மூலம் சிறுவர், சிறுமியரின் எதிர்காலத்தை சீரழிப்பதாக எழுந்த புகார் தொடர்பாக கைது செய்யப்பட்டனர். பின்னர் கிருத்திகா ஜாமினில் வெளியே வந்தார்.
இந்நிலையில், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு நேற்று வந்த கிருத்திகா, உயரதிகாரிகளை சந்தித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நாங்கள் யாரிடமும் பண மோசடி செய்யவில்லை. எங்களிடம் பல கோடி ரூபாய், சொகுசு கார்கள், பங்களாக்கள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் நாங்கள் எந்த சொத்தும் வாங்கவில்லை.
என் கணவர் நடத்தி வந்த யுடியூப் சேனல்களுக்கும், எனக்கும் தொடர்பு இல்லை. எனது வங்கிக் கணக்கை மட்டுமே அவர் பயன்படுத்தி வந்தார். என் கணவர் மீது 200 பேர் புகார் அளித்து இருப்பதாக கூறுவதும் தவறு. நான்கு பேர் மட்டுமே வெவ்வேறு பெயர்களில் புகார் அளித்துள்ளனர். அவர்கள்தான் என் கணவர் வெளியிட்ட வீடியோக்களுக்கு ஆபாசமாக கமென்ட் செய்து, அவரை ஆபாசமாகப் பேச வைத்து, சிக்க வைத்தவர்கள்.
எங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளில் உண்மை இல்லை என்பதை நிரூபிப்போம். குண்டர் தடுப்பு சட்டத்தில் என் கணவரை கைது செய்ததை சட்ட ரீதியாக சந்தித்து, அதிலிருந்து விடுபடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.
