

உலக விலங்கு வழி நோய்கள் தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி கால்நடை துறை சார்பில் செங்கல்பட்டில் செல்லப் பிராணிகளுக்கு சிறப்பு முகாம் நடைபெற்றது. செங்கல்பட்டு கால்நடை துறை உதவி இயக்குநர் சாந்தி தலைமையில் நடைபெற்ற இம்முகாமில் வீட்டில் வளர்க்கும் பூனை, நாய், பறவைகள் போன்றவற்றுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இதுகுறித்து கால்நடை துறை உதவி இயக்குநர் சாந்தி கூறியதாவது:
ஒவ்வோர் ஆண்டும் ஜூலை 6அன்று ‘ஜூனோசிஸ் தினம்' கடைபிடிக்கப்படுகிறது. ஜூனோசிஸ் என்பது ‘விலங்கு வழி நோய்கள்' என்பதாகும். இந்த நோய் விலங்குகளி டமிருந்து மனிதர்களுக்கும் பரவுகிறது. காட்டு விலங்குகள், வீட்டில் வளர்க்கும் பூனை, நாய், பறவைகள் மூலம் மனிதர்களுக்குப் பரவுகிறது. சில ஆட்கொல்லி நோய்களும் விலங்குகள் மூலம் பரவுகின்றன. விலங்குகள் மூலம் பரவும் நோய்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த ஜூலை 6 அன்றுஜூனோசிஸ் தினம் கடைபிடிக்கப் படுகிறது.
இதையொட்டி சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு தங்கள் செல்லப் பிராணிகளுக்கு தடுப்பூசியை செலுத்திக்கொண்டனர். மேலும், இந்த நோய்குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது,
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஆலோசனை கூட்டம்
உலக விலங்கு வழி நோய்கள் தினத்தை முன்னிட்டு ஆட்சியர் ஆ.ர.ராகுல் நாத் தலைமையில் அனைத்து துறை அலுவலர்களுடன் நோய் தடுப்பு ஒருங்கிணைப்பு கூட்டம்நடைபெற்றது. கூட்டத்தில் விலங்குகளில் இருந்து மனிதனுக்கு பரவக்கூடிய நோய்களை குறித்தும், அதைகட்டுப்படுத்தும் வழிமுறைகள் பற்றியும் அனைத்து துறை அலுவலர்களுடன் விவாதிக்கப்பட்டது. மேலும் மழைக்காலத்தில் பரவக் கூடிய நோய்கள் குறித்தும் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை சார்பாக அரசு அலுவலர்களுக்கு நோய் தடுப்பு விழிப்புணர்வு துண்டுப் பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.