

வில்லிவலம் கிராமத்தில் இருளர் மக்களின் குடியிருப்புகளுக்கு, பல ஆண்டுகளாக மின் இணைப்பு வழங்கப்படாமல் உள்ளதாக ‘தி இந்து’வில் செய்தி வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து, தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று இருளர் மக்களுக்கு சோலார் இணைப்புடன் கூடிய மின் விளக்குகளை 14 குடும்பத்தினருக்கு வழங்கினர்.
காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உட்பட்ட வில்லிவலம் கிராமத்தில் வேகவதி ஆற்றின் கரையையொட்டி, 60-க்கும் மேற்பட்ட இருளர் மக்கள் 14 குடிசை வீடுகளில் வசித்து வருகின்றனர். இவர்களின் குடிசை வீடுகளுக்கு பல ஆண்டுகளாக மின்சார இணைப்பு வழங்கப்படாமல் உள்ளதால், அவர்களின் பிள்ளைகள் படிக்க முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளதாக பெற்றோர்கள் வேதனை தெரிவித்தினர்.
அதனால், குடியிருப்புகளுக்கு மின் இணைப்பு வழங்குமாறு ஐயம்பேட்டை மின்சார வாரியம் மற்றும் உத்திரமேரூர் எம்எல்ஏ ஆகியோரிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை.
இதுதொடர்பாக ‘தி இந்து’வில் கடந்த 7-ம் தேதி படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து, அய்யம்பேட்டை மின்சார வாரியத்தினர் ஒருலைன் திட்டத்தில் இருளர் குடிசைகளுக்கு மின் இணைப்பு வழங்கினர்.
இந்நிலையில், சென்னையை சேர்ந்த ஒரு தனியார் தொண்டு நிறுவனத்தினர் இருளர் மக்களின் குடும்பத்தினர் அன்றாட பயன்பாட்டுக்குத் தேவைப்படும் மின் விளக்குகளை, சோலார் பேனல் இணைப்புடன் வழங்கினர்.