

போடி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட தங்கதமிழ்ச்செல்வன் வெற்றிவாய்ப்பை இழந்தாலும் பல்வேறு பிரச்சினைகளுக்காக களப்பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
போடியில் ஓ.பன்னீர் செல்வத்தை எதிர்த்துப் போட்டியிட்ட தங்க தமிழ்செல்வன் வெற்றிவாய்ப்பை இழந்தார். ஆனாலும், தொகுதியில் சுற்றுப்பயணம் செய்து மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வருகிறார். குச்சனூர் சுரபி நதிக்கரையில் கழிவுநீர் கலப்பதைத் தடுப்பதற்காக கடந்த மாதம் ஆய்வுசெய்து இதற்கான திட்டத்தை வரைவு செய்ய பேரூராட்சி அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டார்.
போடியில் மாம்பழத் தொழிற் சாலை அமைக்க விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். போடி அதிகாரிகளிடம் வளர்ச்சிப்பணி, ஆலோசனை என்று பரபரப்பாகச் செயல்பட்டு வருகிறார்.
வாழையாத்துப்பட்டி ராஜபூபாலக் கண்மாய் நீர்வரத்து வாய்க்கால்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
இதற்கான மனுவை ஆட்சியர் க.வீ.முரளிதரனிடம் வழங்கினார்.
இதுகுறித்து தங்கதமிழ்ச் செல்வன் கூறியதாவது: இக்கண் மாய்க்கு மரக்காமலை பகுதியில் இருந்து நீர்வரத்து உள்ளது. எனவே, வரத்து வாய்க்காலையும், கண்மாயையும் தூர்வார வேண்டும்.
வாழையாத்துப்பட்டி ஆதி திராவிட மக்களுக்கு அடுக்கு மாடிக் குடியிருப்பு கட்டித்தருதல், வாழையாத்துப்பட்டி ரயில் தண்டவாளத்துக்கு கீழ் செல்லும் பாதையை அகலப் படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளையும் வலியுறுத்தி உள்ளேன்.
போடியில் 10 ஆண்டுகளாக எம்எல்ஏவாக இருந்துவரும் ஓ.பன்னீர்செல்வத்தால் நிறை வேற்றப்படாத பல திட்டங்களைச் செயல்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன் என்றார்.