Published : 07 Jul 2021 03:14 AM
Last Updated : 07 Jul 2021 03:14 AM

ஒரே நேரத்தில் அனைத்து முக்கிய சாலைகளும் சீரமைப்பு; ஸ்மார்ட் சாலை பணிகளால் மூச்சுத்திணறும் முத்துநகர் மக்கள்: வாகன நெரிசலால் சிக்கித் தவிப்பு

தூத்துக்குடி நகரில் உள்ள அனைத்து முக்கிய சாலைகளிலும் ஒரே நேரத்தில் பணிகள் தொடங்கியுள்ளன. முக்கிய சாலைகள் மூடப்பட்டுள்ளதால் பேருந்து உள்ளிட்ட வாகனங்கள், மக்கள் வசிக்கும் தெருக்கள் வழியாக செல்கின்றன. வாகன ஓட்டிகள் மட்டுமின்றி, பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி நகரம் 2008-ம் ஆண்டு மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. 13 ஆண்டுகளாக மாநகராட்சிக்கு தேவையான எந்த கட்டமைப்பு வசதிகளும் ஏற்படுத்தப்படவில்லை. நகரில் போக்குவரத்து நெருக்கடி என்பது பல ஆண்டுகளாக தீராத தலைவலியாக தொடர்கிறது.

தற்போது, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நடைபெறும் பல்வேறு பணிகள் போக்குவரத்து நெருக்கடியை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளன. இந்த பெரும் சிக்கலுக்கு அனைத்து பிரதான சாலைகளிலும் ஒரே நேரத்தில் பணிகள் நடைபெறுவதே முக்கிய காரணம்.

தூத்துக்குடி நகரில் வாகன நெரிசல் மிகுந்த ஜெயராஜ் சாலை, விஇ சாலை, திருச்செந்தூர் சாலை,விவிடி பிரதான சாலை, பாலவிநாயகர் கோயில் தெரு ஆகிய 5 முக்கிய சாலைகளை ஸ்மார்ட் சாலைகளாக மாற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் கடந்த ஓராண்டாக நடைபெற்று வருவதால் இந்த சாலைகள் வழியாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக, தற்காலிக பேருந்து நிலையத்தை ஒட்டியுள்ள ஜெயராஜ் சாலையில் பணிகள் நடைபெறுவதால், பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் வெளியேவரும் பாதை அடைக்கப்பட்டுள்ளது. ஒரே பாதை வழியாகவே பேருந்துகள் உள்ளே வந்து, வெளியே செல்கின்றன. இதனால்பேருந்து நிலைய வாயிலில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

ஜெயராஜ் சாலையில் பணிகள் நடைபெறுவதால் திருநெல்வேலி, திருச்செந்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள், டூவிபுரத்தில் உள்ள தெருக்கள் வழியாக செல்கின்றன. கார்கள்உள்ளிட்ட இதர வாகனங்களும் தெருக்கள் வழியாகவே செல்வதால் வாகன ஓட்டிகளும், அப்பகுதியில் வசிக்கும் மக்களும் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர்.

திருச்செந்தூர் சாலையில் பணிகள் நடைபெறுவதால் பேருந்துகள் பாளையங்கோட்டை சாலை, புறவழிச்சாலை வழியாக நீண்ட தொலைவு சுற்றி செல்கின்றன. விஇ சாலை, விவிடி பிரதான சாலை, பாலவிநாயகர் கோயில் தெரு ஆகிய பகுதிகளிலும் பணிகள் நடைபெறுவதால் வாகனங்கள் வேறு வழிகளில் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதுதவிர, அனைத்து முக்கிய சாலைகளிலும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக தூத்துக்குடி- பாளையங்கோட்டை சாலையின் இருபுறமும் மழைநீர் வடிகால்அமைக்கும் பணிகள் நடைபெறுவதால் வாகன ஓட்டிகள் சிரமங்களை சந்திக்கின்றனர். தூத்துக்குடி மக்களின் துயரத்தைப் போக்க சாலைப்பணிகளை விரைவாக முடிக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்ட போது, ``ஸ்மார்ட் சிட்டி பணிகளை விரைவாக முடிக்க அரசு உத்தரவிட்டுள்ளதால், மழைக்காலத்துக்கு முன்பாக அனைத்து பணிகளையும் முடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. 50 சதவீதத்துக்கு மேல் பணிகள் முடிவடைந்து விட்டன’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x