Published : 07 Jul 2021 03:14 AM
Last Updated : 07 Jul 2021 03:14 AM

சாரல் காலத்தில் வெறிச்சோடிய குற்றாலம்; 2-வது ஆண்டாக வருவாய் இழந்த வியாபாரிகள்: வெளியூர்களில் கடை அமைத்து அரிய வகை பழங்கள் விற்பனை

சாரல் காலத்தில் இரண்டாவது ஆண்டாக குற்றாலம் வெறிச்சோடி காணப்படுகிறது. குற்றாலம் மலைப் பகுதியில் விளையும் அரிய வகை பழங்களை விற்பனை செய்யும் வியாபாரிகள் சுற்றுவட்டாரப் பகுதி களில் சாலையோரம் தற்காலிக கடைகள் அமைத்து வியாபாரம் செய்கின்றனர்.

குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளுக்கு தடை தொடர்வதால் தென்காசி அருகே சாலையோரத்தில் தற்காலிக கடை வைத்து அரியவகை பழங்களை விற்பனை செய்யும் வியாபாரிகள். கரோனா பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப் பட்டதால் கடந்த ஆண்டு சுமார் 9 மாதங்கள் குற்றாலம் அருவிகளில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இந்நிலையில், இந்த ஆண்டும் கரோனா இரண்டாம் அலை வேகமாக பரவியதால் கடந்த மே 24-ம் தேதி தளர்வில்லா ஊரடங்கு அமலுக்கு வந்தது. அப்போது முதல் சுற்றுலாத் தலங்களும் மூடப்பட்டதால் குற்றாலம் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

இதனால், குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகளை நம்பி கடைகள் வைத்துள்ள வியாபாரிகள் உள்ளிட்ட பலதரப்பட்ட மக்கள் இரண்டாவது ஆண்டாக வருவாய் இழப்புக்கு ஆளாகியுள்ளனர்.

குற்றாலத்தில் சாரல் காலத்தில் மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதியில் விளையும் ரம்ப்டான், துரியன், வால்பேரி, பன்னீர் கொய்யா, முட்டைப்பழம், நோனி, மங்குஸ்தான் உள்ளிட்ட அரிய வகை பழங்களை விற்பனை செய்யும் வியாபாரிகள் தென்காசி, மேலகரம், இலஞ்சி, காசிமேஜர்புரம், இலஞ்சி ரோடு உட்பட குற்றாலம் சுற்றுவட்டார பகுதிகளில் சாலையோரங்களில் தற்காலிக கடை அமைத்து வியாபாரம் செய்கின்றனர்.

இதுகுறித்து வியாபாரிகள் கூறும்போது, ரம்ப்டான் கிலோ ரூ.300 முதல் 350 வரையும், முட்டைப்பழம் ரூ.250-க்கும், வால்பேரி ரூ.100-க்கும், துரியன் ரூ.500 முதல் 800 வரையும் விற்பனையாகிறது. அருவிகளில் குளிக்க அனுமதிக்கப்பட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்தால்தான் வியாபாரம் விறுவிறுப்படையும்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x