

சென்னை தி.நகரில் காற்று மாசுபாடு அளவு படிப்படியாக உயர்ந்து கொண்டே வந்திருப்பது மாசுக் கட்டுப்பாட்டு வாரிய ஆய்வில் தெரியவந்துள்ளது. காற்று மாசு அளவு, அனுமதிக்கப்பட்டதைவிட அதிகம் இருப்பது, சென்னையில் சுவாசிக்கும் காற்றின் தரம் குறைந்து வருவதையும் சுட்டிக் காட்டியிருக்கிறது.
உலகில் பல்லாயிரம் வகை யான ஜீவராசிகள் இருந்தாலும், பரி ணாம வளர்ச்சி காரணமாக அனைத்து உயிர்களையும் அடக்கி ஆளும் அதிகாரம் பெற்றதாக மனித இனம் திகழ்கிறது. ஆரம் பத்தில் தான் உயிர் வாழ பிற உயிரி னங்களை எதிர்க்கத் தொடங்கி ஆபத்தில் இருந்து தற்காத்துக் கொண்ட மனிதர் பிற்காலத்தில் தனது சொகுசு வாழ்க்கைக்காக இயற்கை வளத்தை அழிக்கத் தொடங்கினர். இதன் விளைவாக மழை குறைவு, நிலநடுக்கம், சுனாமி, அதிக வெப்பம், குடிநீர் பிரச் சினை என இயற்கையின் பல சீற்றங்களையும் மனித இனம் சந்திக்கவேண்டியுள்ளது.
தண்ணீரை காசு கொடுத்து வாங் கிக் குடிக்கவேண்டிய நிலை வரும் என்று 50 ஆண்டுகளுக்கு முன்பு யாரும் கனவிலும் நினைத்துப் பார்த்திருக்கமாட்டார்கள். ஆனால் இன்று, எல்லோரும் பாட்டில் நீருடன் அலைகிறார்கள்.
இயற்கை வள அழிப்பின் விளை வாக நாம் சந்தித்துவரும் இன்னொரு பாதிப்பு காற்று மாசுபாடு. பெரும்பாலான இடங்களில் காற்று சுவாசிக்கத் தகுதியற்றதாக உள்ளது. அந்த அளவுக்கு காற்று மாசுபட்டுள்ளது. இப்போது வாட்டர் பாட்டிலுடன் சுற்றுவது போல, எதிர்காலத்தில் ஆக்சிஜன் அடைத்த மினி சிலிண்டருடன் சுற்றித் திரியவேண்டிய நிலை வந்தாலும் ஆச்சரியப்படுவதற் கில்லை.
2007-ல் இருந்தே மாசுபாடு
சென்னை மாநகரில் அண்ணா நகர், வள்ளலார் நகர், கீழ்பாக்கம், தி.நகர், அடையாறு ஆகிய பகுதிகளில் காற்றில் கலந்திருக்கும் தூசி அளவை தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கடந்த 2007ம் ஆண்டு முதல் மாதந்தோறும் கண்காணித்து வந்தது. தற்போது அடையாறு, கீழ்பாக்கம், தி.நகர், அண்ணா நகர் ஆகிய பகுதிகளில் கண்காணித்து வருகிறது. கடந்த 2007-ம் ஆண்டு முதலே இப்பகுதி கள் அனைத்திலும் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாகவே காற்றில் தூசி கலந்திருப்பது தெரியவந்துள்ளது.
காற்றில் கலந்துள்ள தூசி அளவு ‘பிஎம்10’ என்று குறிக்கப் படுகிறது. இதன் மதிப்பு 100 வரை அனுமதிக்கப்பட்ட அள வாகும். தி.நகரில் கடந்த ஜனவரியில் அதிகபட்சமாக 141 என்ற அளவில் பிஎம்10 உள்ளது. பிப்ரவரி யில் 119, மார்ச்சில் 124, ஏப்ரலில் 163, மே மாதத்தில் 148, ஜூன் மாதத் தில் 148 என இங்கு பிஎம்10 அளவு பதிவாகியுள்ளது. சென்னை சுவாசிக்க தகுதியற்ற பகுதியாக மாறிவருவதையே இது காட்டுகிறது.
இவ்வாறு காற்றில் தூசி அதிகம் கலந்திருப்பதால் ஏற் படும் விளைவுகள் குறித்து சுவாச நோய் பிரிவு மருத்துவர் ஒருவரிடம் கேட்டபோது, ‘‘தூசி கலந்த காற்றை சுவாசிப்பதால் சுவாசக் கோளாறுகள், நுரையீரல் புற்று நோய், பல்வேறு நுரையீரல் பாதிப்புகள் வர வாய்ப்பு உள்ளது. தூசி கலந்த காற்றை சுவாசிப்பதால் ஆஸ்துமா நோயாளிகள் கடும் அவதிக்கு உள்ளாவார்கள். இது உயிரிழப்புக்குகூட வழிவகுக்கும்’’ என்றார்.
இதுகுறித்து மாசுக் கட்டுப்பாடு வாரிய அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:
காற்று மாசுபடுவதால் பல்வேறு பாதிப்புகள் வருவது உண்மை. இதைத் தடுக்க அரசின் பல்வேறு துறைகளுக்கு ஆலோசனை வழங்கி வருகிறோம். நகரத்தில் வாகனப் பெருக்கம் காரணமாக அவை வெளியிடும் புகை மற்றும் அவை சாலையில் செல்லும்போது அங்குள்ள தூசிகள் காற்றில் பறந்து மாசு ஏற்படுகிறது. அதனால் வாகனப் பெருக்கத்தை குறைக்கும் நோக்கில் மெட்ரோ ரயில் திட்டத்தை அரசுக்கு பரிந்து ரைத்தோம்.
மேலும் சாலை அமைக்கும் போது சாலையோரத்தில் மண் பகுதியை விடாமல் கடைசி வரை தார் போடுமாறு அறிவுறுத்தியுள்ளோம்.
நகரில் ஆங்காங்கே கட்டுமானப் பணிகள் நடப்பதாலும் காற்று மாசு அதிகரிக்கிறது. இதை குறைக்க கட்டுமான நிறுவனங்கள், தடுப்புகள் மற்றும் வலைகளை அமைத்து பணிகளைச் செய்ய வேண்டும். புழுதி பறக்காத வகையில் தரையில் அடிக்கடி நீர் தெளிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.