

நீதிமன்றத்துக்கு முக்கியத் தகவலைத் தெரிவிக்காமல் மறைத்ததாக வணிக வரித்துறையின் மாநில வரி அதிகாரியை உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்யும்படி, வணிக வரித்துறை ஆணையருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உள் விழி கண்ணாடிகளுக்கு மாநில மற்றும் மத்திய ஜிஎஸ்டி எனும் சரக்கு மற்றும் சேவை வரி விலக்கு அளிக்கக் கோரிய வழக்கு, நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, இந்தக் கண்ணாடிகளை மருத்துவமனைகளுக்கும், மருத்துவர்களுக்கும் விற்கும்போது விலக்கு வழங்கப்படுகிறதா என அரசுத் தரப்பு வழக்கறிஞரிடமும், காணொலிக் காட்சி மூலம் ஆஜராகியிருந்த மாநில வரி அதிகாரி முகுந்தனிடமும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.
அதற்குத் தமிழகத்தில் மேற்கொள்ளும் விற்பனைக்கு விலக்கு அளிக்கப்படுவதாகவும், பிற மாநிலங்களுக்கு விற்கப்படும்போது வரி விதிக்கப்படுவதாகவும் மாநில வரி அதிகாரி முகுந்தன் தெரிவித்தார்.
பின்னர் வழக்கில் தீர்ப்பு வாசிக்கும்போது குறுக்கிட்ட அரசு வழக்கறிஞர், மருத்துவமனைகளுக்கும், மருத்துவர்களுக்கும் கண்ணாடி வில்லைகள் விற்கும்போது அதற்கு விற்பனை வரி விதிக்கப்படுவதாகத் தெரிவித்தார்.
இந்த முக்கியமான தகவலை மறைத்ததாக, வரி அதிகாரிக்குக் கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதி, அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து, உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்ய வணிகவரித் துறைக்கு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஜூலை 8ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தார்.