

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க வேண்டும் என்ற எனது தாயின் கனவை நிறைவேற்றி விட்டேன் என டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ள திருச்சி வீராங்கனை தனலெட்சுமி பெருமிதம் தெரிவித்தார்.
உலகின் மிகப்பெரிய விளையாட்டுத் திருவிழாவான ஒலிம்பிக் போட்டி வரும் 23-ம் தேதி முதல் ஆகஸ்ட் 8-ம் தேதி வரை ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக இந்திய வீரர்கள், வீராங்கனைகள் தகுதித் தேர்வின் அடிப்படையில் அறிவிக்கப்பட்டு வருகின்றனர்.
இதன்படி தடகளப் பிரிவின் தொடர் ஓட்ட வீரர்கள் பட்டியலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆரோக்கிய ராஜீவ் (ஆண்கள் 4*400 தொடர் ஓட்டம்), ரேவதி வீரமணி (கலப்பு 4*400 மீ தொடர் ஓட்டம்), தனலெட்சுமி சேகர் (கலப்பு 4*400 மீ தொடர் ஓட்டம்), சுபா வெங்கடேசன் (கலப்பு 4*400 மீ தொடர் ஓட்டம்), நாகநாதன் பாண்டி (ஆண்கள் 4*400 தொடர் ஓட்டம்) ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் ஆரோக்கிய ராஜீவ், தனலெட்சுமி சேகர், சுபா வெங்கடேசன் ஆகிய 3 பேர் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.
திருச்சி விமான நிலையம் அருகேயுள்ள குண்டூர் கிராமத்தைச் சேர்ந்த சேகர்- உஷா தம்பதியரின் மகள் தனலெட்சுமி. கடந்த மார்ச் மாதம் பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் நடைபெற்ற 24-வது தேசிய ஃபெடரேஷன் கோப்பை தடகளப் போட்டியில் பங்கேற்ற இவர் 100 மீட்டர் ஓட்ட தூரத்தை 11.39 விநாடிகளில் கடந்து, இந்தியாவின் முன்னணி வீராங்கனையான டூட்டி சந்தை முந்தினார். இதேபோல 200 மீட்டர் ஓட்டத்தில் போட்டி தூரத்தை 23.26 விநாடிகளில் கடந்து பி.டி.உஷா நிகழ்த்திய சாதனையை முறியடித்து இந்தியாவே தன்னைத் திரும்பிப் பார்க்க வைத்தார்.
தற்போது ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கத் தேர்வாகியுள்ள தனலெட்சுமி பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் உள்ள தேசியப் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வருகிறார்.
இதுகுறித்து அவர் 'இந்து தமிழ்' இணையதளத்திடம் கூறும்போது, ''சிறுவயதிலிருந்தே விளையாட்டு மீது ஆர்வம் இருந்தாலும், கடந்த 4 ஆண்டுகளாகத் தடகளத்தில் தீவிரப் பயிற்சி எடுத்து வருகிறேன். ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த நான், பயிற்சிக்கு ஆகும் செலவுகளைக் கூடச் செய்ய முடியாத நிலை இருந்தது. ஆனாலும், என்னை ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கக்கூடிய ஒரு தடகள வீராங்கனையாக மாற்ற வேண்டும் என்பதில் எனது அம்மா உறுதியாக இருந்தார்.
மணிகண்டன் உள்ளிட்ட பயிற்சியாளர்கள் மற்றும் பலரது ஒத்துழைப்புடன் ஒலிம்பிக்கில் நான் பங்கேற்க வேண்டும் என்ற எனது அம்மாவின் கனவை நிறைவேற்றி உள்ளேன். எனக்கும் மனநிறைவாக உள்ளது. பெண் குழந்தை என்பதால் என்னை வீட்டைவிட்டு வெளியே அனுப்ப வேண்டாம் எனக் குடும்ப உறவினர்களிலேயே பலர் கூறினர். அதையெல்லாம் எதிர்த்து, அவர் என்னை வெளியில் அனுப்பினார். அந்த நம்பிக்கையைக் காப்பாற்றி ஒலிம்பிக்கில் பங்கேற்கத் தகுதி பெற்றுள்ள நிலையில், நாட்டுக்குப் பெருமைத் தேடித் தரும் வகையில் நிச்சயம் இப்போட்டியில் பதக்கத்தை வெல்வேன் என நம்புகிறேன்'' என்று தனலெட்சுமி தெரிவித்தார்.