

தொடர் ஓட்டத்துக்கான சிறந்த அணி அமைந்துள்ளதால் இம்முறை பதக்கம் வெல்லப் பிரகாசமான வாய்ப்பு ஏற்பட்டிருப்பதாக ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க 2-வது முறையாகத் தகுதி பெற்றுள்ள திருச்சியைச் சேர்ந்த வீரர் ஆரோக்கிய ராஜீவ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
உலகின் மிகப்பெரிய விளையாட்டுத் திருவிழாவான ஒலிம்பிக் போட்டி ஜூலை 23-ம் தேதி முதல் ஆகஸ்ட் 8-ம் தேதி வரை ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்கான இந்திய வீரர்கள், வீராங்கனைகள் தகுதித் தேர்வின் அடிப்படையில் அறிவிக்கப்பட்டு வருகின்றனர்.
இதன்படி தடகளப் பிரிவின் தொடர் ஓட்ட வீரர்கள் பட்டியலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆரோக்கிய ராஜீவ் (ஆண்கள் 4* 400 தொடர் ஓட்டம்), ரேவதி வீரமணி (கலப்பு 4* 400 மீ தொடர் ஓட்டம்), தனலெட்சுமி சேகர் (கலப்பு 4*400 மீ தொடர் ஓட்டம்), சுபா வெங்கடேசன் (கலப்பு 4*400 மீ தொடர் ஓட்டம்), நாகநாதன் பாண்டி (ஆண்கள் 4*400 தொடர் ஓட்டம்) ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் ஆரோக்கிய ராஜீவ், தனலெட்சுமி சேகர், சுபா வெங்கடேசன் ஆகிய 3 பேர் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.
இவர்களில் ராணுவ வீரரான ஆரோக்கிய ராஜீவ் லால்குடியைச் சேர்ந்தவர். இவரது தந்தை சௌந்தரபாண்டியன் லாரி ஓட்டுநர். தாயார் லில்லி சந்திரா. அர்ஜுனா விருது பெற்றவர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரரான ஆரோக்கிய ராஜீவ், ஏற்கெனவே 3 முறை ஆசியப் போட்டிகளிலும், பலமுறை தேசிய அளவிலான போட்டிகளிலும் பதக்கம் வென்றுள்ளார். 2016-ம் ஆண்டு நடைபெற்ற ரியோ ஒலிம்பிக் போட்டியைத் தொடர்ந்து, தற்போது 2-வது முறையாக டோக்கியோ ஒலிம்பிக் போட்டியிலும் பங்கேற்கத் தகுதி பெற்றுள்ளார்.
இதுகுறித்து அவர் 'இந்து தமிழ்' இணையதளத்திடம் கூறும்போது, ''எனது தடகளப் பயணத்தின் முக்கியமான படிநிலையில் தற்போது இருக்கிறேன். கடந்த 10 ஆண்டுகளாகக் கடுமையான பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோதிலும், நடப்பு ஒலிம்புக் போட்டியில் பதக்கம் வென்றாக வேண்டும் என்ற ஆர்வத்தில் கரோனா காலக் கட்டுப்பாடுகளையும் தாங்கிக்கொண்டு தற்போது மிகுந்த உத்வேகத்துடன் பஞ்சாப் மாநிலம், பாட்டியாலாவில் தேசியப் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வருகிறேன்.
ஒலிம்பிக் போட்டிக்கான ஆண்கள் தொடர் ஓட்டத்துக்குச் சிறந்த அணி அமைந்துள்ளது. எனவே, இம்முறை பதக்கம் வெல்வதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. எங்களின் வெற்றி மூலம் இந்த நாட்டுக்குப் பெருமை தேடித் தருவோம் என நம்புகிறேன்'' என்று ஆரோக்கிய ராஜீவ் தெரிவித்தார்.