

மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் பொறுப்புள்ள அரசு தமிழகத்தில் அமைய வேண்டிய தருணம் இது என்று திமுக பொருளாளர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் முகநூலில் எழுதி வெளியிட்ட பதிவில், ''ஆட்சியை கைப்பற்றவும், கைப்பற்றிய ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளவும் அதிமுக ஒவ்வொரு கட்டத்திலும் பொய் வாக்குறுதிகளை அள்ளி வீசியிருக்கிறது.
விளம்பரத்திற்காகவே நடக்கும் வெற்று அறிவிப்பு அரசாகவே அதிமுக அரசு திகழ்கிறது. இந்த அரசு அறிவித்த திட்டங்களில் பெரும்பான்மையானவை இதுவரை நிறைவேற்றப்படவில்லை.
இது தவிர அதிமுக தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகளில் கிட்டதட்ட 80% வாக்குறுதிகள் இன்றுவரை நிறைவேற்றப்படாமலேயே உள்ளன. 110 விதியின்கீழ் அறிவித்த திட்டங்கள் அனைத்தும் ஏட்டுச்சுரைக்காய்கள் போல வெறுமனே காகிதங்களில் வெளிவந்த அறிவிப்புகளாகவே மட்டும் உள்ளன.
மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் பொறுப்புள்ள அரசு தமிழகத்தில் அமைய வேண்டிய தருணம் இது'' என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.