Published : 06 Jul 2021 04:21 PM
Last Updated : 06 Jul 2021 04:21 PM

முந்திரி ஏற்றுமதி ஊக்குவிப்புக் குழுவை மூடும் முடிவை அரசு கைவிட வேண்டும்: ராமதாஸ்

ராமதாஸ்: கோப்புப்படம்

சென்னை

முந்திரி ஏற்றுமதி ஊக்குவிப்புக் குழுவை மூடும் முடிவை அரசு கைவிட வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, ராமதாஸ் இன்று (ஜூலை 06) வெளியிட்ட அறிக்கை:

"இந்தியாவின் முந்திரி ஏற்றுமதியாளர்களுக்குப் பெரும் துணையாகச் செயல்பட்டு வரும் முந்திரி ஏற்றுமதி ஊக்குவிப்புக் குழுவுக்கு வழங்கப்பட்டுள்ள உறுப்பினர் பதிவு மற்றும் புதுப்பித்தல் சான்றிதழ் வழங்கும் அதிகாரங்களை மத்திய அரசு ரத்து செய்திருக்கிறது. அடுத்தகட்டமாக, அந்த அமைப்பையே கலைக்க அரசு திட்டமிட்டிருக்கிறது. அதுவும் நடந்துவிட்டால், தமிழகத்தில் முந்திரி ஏற்றுமதி பேரழிவைச் சந்திக்கும்.

இந்தியாவுக்கு மிகப்பெரிய அளவில் அந்நியச் செலாவணியைப் பெற்றுத் தருவதுடன், 10 லட்சத்திற்கும் கூடுதலான வேலைவாய்ப்பையும் உருவாக்கிக் கொடுப்பது முந்திரி சாகுபடி மற்றும் ஏற்றுமதி ஆகும். இந்தியாவில் உள்ள முந்திரி ஏற்றுமதியாளர்களுக்கு இந்த விஷயத்தில் பெரும் துணையாகத் திகழ்ந்து வருவது கேரள மாநிலம் கொல்லத்தைத் தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் முந்திரி ஏற்றுமதி ஊக்குவிப்புக் குழு ஆகும்.

இந்தியாவிலிருந்து முந்திரிப் பருப்பு மற்றும் முந்திரிக் கொட்டையைக் கொண்டு தயாரிக்கப்படும் எண்ணெய் உள்ளிட்ட துணைப் பொருட்களை இறக்குமதி செய்ய விரும்புபவர்களுக்கும், அவற்றை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் இந்திய நிறுவனங்களுக்கும் இடையே பாலமாகச் செயல்பட்டு வருவது இந்த அமைப்புதான்.

இந்தியாவிலிருந்து முந்திரி மற்றும் அதன் துணைப் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு இந்த அமைப்பில் உறுப்பினராக வேண்டியது அவசியமாகும். உறுப்பினராகப் பதிவு செய்வதுடன், அது காலாவதியானவுடன் புதுப்பித்து அதற்கான சான்றிதழ்களை வைத்திருந்தால்தான் மத்திய அரசு வழங்கும் ஏற்றுமதிக்கான பல்வேறு சலுகைகளை ஏற்றுமதியாளர்கள் பெற முடியும்.

ஆனால், முந்திரி ஏற்றுமதி ஊக்குவிப்புக் குழுவில் உறுப்பினராகப் பதிவு செய்தல், புதுப்பித்தல் மற்றும் அவற்றுக்கான சான்றிதழ் வழங்கும் அதிகாரம் முந்திரி ஏற்றுமதி ஊக்குவிப்புக் குழுவிடமிருந்து பறிக்கப்பட்டு, வேளாண்மை மற்றும் பதனம் செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது.

அடுத்தகட்டமாக, முந்திரி ஏற்றுமதி ஊக்குவிப்புக் குழு மூடப்படவுள்ளது. இது முந்திரி ஏற்றுமதி வளர்ச்சியைச் சிதைத்து விடும். இந்த முடிவு திரும்பப் பெறப்பட வேண்டும்.

முந்திரி ஏற்றுமதி ஊக்குவிப்புக் குழுவுடன் ஒப்பிடும்போது வேளாண்மை மற்றும் பதனம் செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் (Agricultural and Processed Food Products Export Development Authority) கூடுதல் அதிகாரம் கொண்ட, பெரிய அமைப்பு ஆகும். அதன் தலைவராக இருப்பவர் தமிழகத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரிதான்.

ஆனாலும், அந்த அமைப்பால் முந்திரி ஏற்றுமதிக்கு எந்த உதவியும் செய்ய இயலாது. ஏனெனில், வேளாண்மை மற்றும் பதனம் செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் நூற்றுக்கும் மேற்பட்ட வேளாண் விளைபொருட்கள் மற்றும் பதனம் செய்யப்பட்ட உணவுப் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு உதவிகளைச் செய்து வருகிறது.

நூறு பொருட்களுடன் நூற்றி ஒன்றாவது பொருளாக முந்திரியையும் ஏற்றுமதி செய்யும்போது அதில் கூடுதல் கவனம் செலுத்த முடியாது. அதனால் முந்திரி ஏற்றுமதி சரியும்.

உலக அளவில் முந்திரி ஏற்றுமதியில் கடந்த பத்தாண்டு வரையிலும் இந்தியாதான் முதலிடத்தில் இருந்து வந்தது. ஆனால், இப்போது இந்தியா இரண்டாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுவிட்டது. இத்தகைய சூழலில், முந்திரி ஏற்றுமதியில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்; அதுமட்டுமின்றி, வியட்நாம் போன்ற நாடுகளில் இருந்து தரம் குறைந்த முந்திரி சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்டு இந்திய சந்தைகளில் விற்பனை செய்யப்படுவதால் அதைத் தடுக்க வேண்டும்; அதற்காக முந்திரி ஏற்றுமதியில் மட்டும் தனி கவனம் செலுத்தும் அமைப்பு தேவை.

ஏற்கெனவே நூற்றுக்கும் மேற்பட்ட பொருட்களின் ஏற்றுமதியை கவனிக்க வேண்டியுள்ள வேளாண் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தால் இது முடியாது.

முந்திரி சாகுபடியும், ஏற்றுமதியும் பத்தோடு பதினொன்றாக கவனிக்கப்பட வேண்டியவை அல்ல. தனி கவனம் செலுத்தப்பட வேண்டியவை. முந்திரி ஏற்றுமதி மூலம் இந்தியாவுக்கு ஆண்டுக்கு ரூ.5,500 கோடி அந்நியச் செலாவணி கிடைக்கிறது. இந்திய அளவில் 10 லட்சம் பேருக்கும், தமிழகத்தில் மட்டும் 2 லட்சம் பேருக்கும் முந்திரி ஏற்றுமதி மூலம் வேலைவாய்ப்பு கிடைக்கிறது.

தமிழகத்தில் கடலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை, தேனி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் முந்திரி சாகுபடிதான் முதன்மைத் தொழிலாகத் திகழ்கிறது. அதிலும், குறிப்பாக நமது கடலூர், விழுப்புரம், அரியலூர் மாவட்டங்களில் விளையும் பண்ருட்டி முந்திரிக்கு உலக சந்தையில் தனி வரவேற்பு உள்ளது.

முந்திரி ஏற்றுமதிக்குத் தனி ஊக்குவிப்பு அமைப்பு இல்லை என்றால், இந்தப் பொருட்களின் பெருமைகளை உலகச் சந்தையில் விளக்கிக் கூறி சந்தைப்படுத்த முடியாமல் போய்விடும். எனவே, முந்திரி ஏற்றுமதி ஊக்குவிப்புக் குழு அதற்கு வழங்கப்பட்ட அனைத்து அதிகாரங்களுடன் தனி அமைப்பாக நீடிப்பது அவசியம்.

இதைக் கருத்தில் கொண்டு முந்திரி ஏற்றுமதி ஊக்குவிப்புக் குழுவிடமிருந்து பறிக்கப்பட்ட உறுப்பினராகப் பதிவு செய்தல், புதுப்பித்தல் மற்றும் அவற்றுக்கான சான்றிதழ் வழங்கும் அதிகாரத்தை மீண்டும் அந்த அமைப்பிடமே மத்திய அரசு வழங்க வேண்டும்.

அதுமட்டுமின்றி, முந்திரி ஏற்றுமதி ஊக்குவிப்புக் குழு தனி அமைப்பாகத் தொடரும் என்றும் மத்திய அரசு அறிவிக்க வேண்டும். இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றும்படி மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்".

இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x