'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' திட்டம்; திருச்சி மாவட்டத்தில் இதுவரை 1,142 மனுக்களுக்குத் தீர்வு

பெண்ணுக்குத் தையல் இயந்திரத்தை வழங்கிய அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி. உடன் மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு உள்ளிட்டோர்.
பெண்ணுக்குத் தையல் இயந்திரத்தை வழங்கிய அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி. உடன் மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு உள்ளிட்டோர்.
Updated on
1 min read

'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' திட்டத்தின் கீழ், திருச்சி மாவட்டத்தில் இதுவரை 1,142 மனுக்களுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது.

'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்களின் பேரில், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (ஜூலை 06) நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு, மாநிலப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர், 'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்கள் மீது தீர்வு கண்டு முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, கணவரை இழந்தோர் உதவித்தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளைப் பயனாளிகள் 15 பேருக்கு வழங்கினர்.

மேலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், மாற்றுத்திறனாளிகள் 20 பேருக்கு தாலிக்கு 8 கிராம் தங்கத்துடன் திருமண நிதியுதவி, 207 பேருக்கு மோட்டார் பொருத்தப்பட்ட விலையில்லா தையல் இயந்திரம், தசைச் சிதைவு மற்றும் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் 5 பேருக்கு பேட்டரியால் இயங்கும் சிறப்புச் சக்கர நாற்காலி, பார்வைத் திறன் குறைந்த 10 பேருக்கு மின்னணு புத்தகங்களை பிரெய்லி எழுத்துகள் வடிவில் தொடு உணர்வுடன் அறிந்து வாசிக்க உதவும் கருவி என, 241 பேருக்கும் மற்றும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில், திருமண நிதியுதவித் திட்டத்தின் கீழ் 227 பேருக்கு தலா 8 கிராம் தங்கத்துடன் அவர்களில் பட்டதாரி ஏழைப் பெண்கள் 143 பேருக்கு தலா ரூ.50,000 மற்றும் பட்டதாரி அல்லாத ஏழைப் பெண்கள் 84 பேருக்கு தலா ரூ.25,000 ஆகிய நலத் திட்ட உதவிகளையும் அமைச்சர்கள் வழங்கினர்.

நிகழ்ச்சியில், சட்டப்பேரவை உறுப்பினர்கள் அ.சவுந்தரபாண்டியன், எஸ்.ஸ்டாலின்குமார், எஸ்.இனிகோ இருதயராஜ், சீ.கதிரவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இது தொடர்பாக, மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் தொடர்புடைய துறை அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன்படி, திருச்சி மாவட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து இதுவரை 2,091 மனுக்கள் பெறப்பட்டு, 1,142 மனுக்களுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது. எஞ்சிய 949 மனுக்கள் பரிசீலனையில் உள்ளன" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in