

தமிழக அரசு கடிதம் மட்டும் எழுதுவதோடு நிறுத்திக்கொள்ளாமல், மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் கொடுத்து மேகதாது அணை பணிகளை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
காவிரியின் குறுக்கே மேகதாது-வில் அணை கட்ட தமிழக அரசு ஒத்துழைப்பு தரவேண்டும் என, கர்நாடக முதல்வர் எடியூரப்பா தமிழக முதல்வர் ஸ்டாலினுக்குக் கடிதம் எழுதியிருந்தார். அதில், ''மேகதாது அணை கட்டுவது தமிழகத்தை பாதிக்காது. இதனால், தமிழகம், கர்நாடகா என இரு மாநிலங்களுக்கும் பயன் உண்டு. மேகதாது அணை குறித்து இரு மாநிலப் பிரதிநிதிகளும் அதிகாரிகள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தலாம்'' என எடியூரப்பா தெரிவித்திருந்தார்.
இதற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின், கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு எழுதியுள்ள பதில் கடிதத்தில் மேகதாது திட்டத்தைத் தொடர வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்நிலையில், மேகதாது அணை விவகாரம் தொடர்பாக, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இன்று (ஜூலை 06) தன் ட்விட்டர் பக்கத்தில், "மேகதாது பகுதியில் அணைகட்டியே தீருவோம் என, கர்நாடக அரசு கூறியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. அப்படி ஓர் அணை உருவானால் ஒட்டுமொத்த தமிழகமும் பெரும் பாதிப்புக்கு ஆளாகும்.
எனவே, தமிழக அரசு கடிதம் மட்டும் எழுதுவதோடு நிறுத்திக்கொள்ளாமல், மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் கொடுத்து மேகதாது அணை பணிகளை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். நீதிமன்றத்தின் வழியாகவும் சட்டப்பூர்வ நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.
இதேபோல், வடமாவட்டங்களின் பாசன ஆதாரமான தென்பெண்ணை ஆற்றின் துணை நதியான மார்கண்டேய ஆற்றின் குறுக்கே ஊரடங்கு காலத்தில் கர்நாடகா புதிய அணையைக் கட்டி இருப்பது குறித்தும், இதற்காக கடந்த ஆட்சியில் தமிழகத்திலிருந்து கட்டுமான பொருட்கள் அனுப்பியதாக வெளியாகி உள்ள செய்திகள் பற்றியும் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும்" என பதிவிட்டுள்ளார்.