ஒளிப்பதிவு திருத்த மசோதா-2021; அமைதியைச் சீர்குலைக்கும் செயல்களை அரசு அனுமதிக்கக் கூடாது: முத்தரசன்

இரா.முத்தரசன்: கோப்புப்படம்
இரா.முத்தரசன்: கோப்புப்படம்
Updated on
1 min read

அமைதியைச் சீர்குலைக்கும் செயல்களை அரசு அனுமதிக்கக் கூடாது என, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, முத்தரசன் இன்று (ஜூலை 06) வெளியிட்ட அறிக்கை:

"நாட்டின் அரசியலமைப்புச் சட்டம் உறுதி செய்துள்ள பேச்சுரிமை, எழுத்துரிமை, அரசின் கொள்கைகளை விமர்சித்து மக்களை அணி திரட்டி, போராடும் உரிமை என அடிப்படை உரிமைகள் மீது மத்திய பாஜக அரசு தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. மத்திய அரசின் அதிகார அத்துமீறலையும், அதன் மோசமான விளைவுகளையும் எதிர்த்துப் போராடுவோர் அடக்கி ஒடுக்கப்படுகின்றனர்.

அரசியலமைப்புச் சட்டத்தைச் சிறுமைப்படுத்தும் வகையில், புதிய சட்டங்களைத் தொடர்ந்து இயற்றி வரும் மத்திய அரசு, தற்போது திரைப்பட ஒளிப்பதிவு திருத்த மசோதா 2021-ஐக் கொண்டுவந்துள்ளது. இதன் மூலம், திரைப்படங்களில் தாங்கள் விரும்பும் சார்பு கருத்துகள் மற்றும் காட்சிகளை மட்டுமே அனுமதிக்க வழிவகை செய்துள்ளது.

மேலும், தணிக்கைத் துறையின் அனுமதி பெற்று புழக்கத்தில் உள்ள பழைய திரைப்படங்களையும் தடை செய்வது, அதன் பல்வேறு காட்சிகளை வெட்டிச் சீர்குலைப்பது என்ற தீய நோக்கத்தை உள்ளடக்கியுள்ளது. மேல்முறையீட்டு உரிமை முற்றிலுமாகப் பறிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கருப்புச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என, குரல் எழுப்பி வருபவர்களைக் குறிப்பாக நடிகர் சூர்யாவைக் குறிவைத்து பாஜக இளைஞரணியும், அதன் ஆதரவு அமைப்புகளும் கலகத்தைத் தூண்டும் மலிவான செயலில் ஈடுபட்டு வருவதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

ஜனநாயக உரிமையைப் பறித்து, சட்டத்தைக் கையில் எடுத்துக்கொள்ளும் சீர்குலைவு செயல்களை அரசு உறுதியான நடவடிக்கை எடுத்து ஒடுக்க வேண்டும் என, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு கேட்டுக் கொள்கிறது".

இவ்வாறு இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in