

திருச்சியில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தவந்த மாநில நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு, "நானும் சேர்ந்து சொல்கிறேன், மேகதாதுவில் அணைக் கட்டக் கூடாது" என்று கூறியதை, விவசாயிகள் கைதட்டி வரவேற்றனர்.
"காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட மத்திய அரசு அனுமதி அளிக்கக் கூடாது. தென்பெண்ணை ஆற்றில் கர்நாடக அரசு கட்டியுள்ள அணையை இடிப்பதற்கு பிரதமர் மோடி உத்தரவிட வேண்டும். தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்திய பிறகே யாருக்கு எவ்வளவு இட ஒதுக்கீடு என்று தமிழக அரசு முடிவு செய்ய வேண்டும். மூன்று வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்" ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் போராட்டம் நடத்த தேசிய - தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் இன்று (ஜூலை 06) வந்தனர்.
ஆட்சியர் அலுவலக பிரதான நுழைவுவாயிலுக்கு விவசாயிகள் சென்றுவிடாமல் தடுப்பதற்காக, ஆட்சியர் அலுவலகம் அருகே போலீஸார் தடுப்புகளை அமைத்திருந்தனர்.
இதையடுத்து, சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.அய்யாக்கண்ணு தலைமையில், பெண்கள் 6 பேர் உட்பட விவசாயிகள் 85 பேர், சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக, ஆட்சியர் அலுவலகச் சாலையில் வாகனப் போக்குவரத்து தடைப்பட்டது.
அதேவேளையில், ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர்கள் பங்கேற்ற அரசு நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. இதனிடையே, சாலையில் அமர்ந்திருந்த விவசாயிகளில் சிலர், போலீஸார் தடுப்பை மீறி ஆட்சியர் அலுவலக பிரதான நுழைவுவாயில் பகுதிக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆட்சியர் அலுவலக நுழைவுவாயில் பகுதி வரை அனுமதிக்காமல், தங்களைச் சற்று முன்னதாகவே தடுத்து நிறுத்தியது குறித்து போலீஸாரிடம் விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால், ஆட்சியர் அலுவலகத்தின் பிரதான நுழைவுவாயில் கதவுகளை போலீஸார் அடைத்ததால், அலுவலகத்தில் இருந்து வெளியேயும், அலுவலகத்துக்குள்ளும் யாரும் செல்ல முடியவில்லை. உள்ளேயும், வெளியேயும் வாகனங்கள் வரிசையாக நின்றன.
தகவலறிந்து பேச்சுவார்த்தை நடத்தவந்த மாவட்ட வருவாய் அலுவலர் த.பழனிகுமாரிடமும் விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து, அரசு நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு வெளியே வந்த மாநில அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு ஆகியோர், விவசாயிகளின் போராட்டத்தை அறிந்து, பேச்சுவார்த்தை நடத்துவதற்காகப் போராட்டம் நடைபெற்ற பகுதிக்கு வந்தனர். அவர்களிடம் பி.அய்யாக்கண்ணு கோரிக்கை மனுவை அளித்தார்.
தொடர்ந்து, அவர்களிடம் அமைச்சர் கே.என்.நேரு கூறியதாவது:
"விவசாயிகளின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு உறுதுணையாக இருக்கும். நீங்கள் விவசாயிகளுக்காகப் போராடுகிறீர்கள். நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்.
மேகதாதுவில் அணை கட்டக் கூடாது என்று கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். மேலும், இது தொடர்பாக மாநில நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் இன்று டெல்லியில் மத்திய அமைச்சரைச் சந்தித்துள்ளார்.
திமுக அரசு விவசாயிகளின் பிரச்சினைக்கு முன்னுரிமை கொடுத்து விவசாயிகளுடன் இருக்கும். நானும் சேர்ந்து சொல்கிறேன். மேகதாது அணையைக் கட்டக் கூடாது.
தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணையை உடைக்க வேண்டும் என்று, விவசாயிகள் கோரியுள்ளனர். இது தொடர்பாக, நீதிமன்றத்தை நாடி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் விவசாயிகளுக்காக புதிய பாசனத் திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிக்க உள்ளார். குறிப்பாக, விவசாயத்துக்கென தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.
விவசாயிகளின் நலனே அரசுக்கு முக்கியம். முதல்வரை நீங்கள் நம்புங்கள். அவர் உங்களுடன் இருப்பார்.
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது தொடர்பாக, அரசின் மூலம் என்ன நடவடிக்கை எடுக்க முடியுமோ அது கண்டிப்பாக எடுக்கப்படும்".
இவ்வாறு அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.