

கிருஷ்ணராயபுரம் இளைஞர் கொலையில் சகோதரர்கள் உள்ளிட்ட 3 பேரை மாயனூர் போலீஸார் கைது செய்தனர்.
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரத்தை அடுத்த பிச்சம்பட்டியை சேர்ந்த ராஜா (28), பிரபாகரன் (28) ஆகியோர் நேற்று முன்தினம் (ஜூலை 04) இருசக்கர வாகனத்தில்பிச்சம்பட்டி திரும்பியபோது, தனியார் கட்டுமான நிறுவன லாரி இடையூறாக நின்றுள்ளது. இதனால், லாரி ஓட்டுநர் செந்திலிடம் இருவரும் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
செந்திலுக்கு ஆதரவாக தனியார் கட்டுமான நிறுவன மேற்பார்வையாளர் தர்மதுரை சம்பவ இடத்திற்கு வந்துள்ளார். இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, அப்பகுதியைச் சேர்ந்த கொத்தனார் பிரபு (35) மறுநாள் பேசிக்கொள்ளலாம் எனக்கூறி, அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பியுள்ளார்.
பிச்சம்பட்டி பகவதியம்மன் கோயிலில் நேற்று (ஜூலை 05) சமாதானப் பேச்சுவார்த்தை நடந்தபோது தர்மதுரையுடன் வந்த 10-க்கும் மேற்பட்டோர், கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் பிரபுவை திடீரென வெட்டி, தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர். இதில், காயமடைந்த பிரபு மருத்துமவனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
மாயனூர் போலீஸார் சம்பவம் குறித்து, மணவாசியைச் சேர்ந்த தர்மதுரையின் அண்ணன் ராஜதுரை (26), தர்மதுரை (23), அபிஷேக் என்கிற வேல்முருகன் (21), மேட்டு மகாதானபுரத்தைச் சேர்ந்த கதிர்வேல் உள்ளிட்ட சிலர் மீது நேற்று கொலை வழக்குபதிவு செய்து, ராஜதுரை, தர்மதுரை, வேல்முருகன் ஆகிய 3 பேரை நேற்றிரவு கைதுசெய்து மற்றவர்களைதேடி வருகின்றனர்.