

உருமாறிய கரோனா வைரஸை தடுக்க இரண்டு தவணை தடுப்பூசியை கட்டாயம் போட்டுக் கொள்ள வேண்டும் என்று பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் தெரிவித்தார்.
இந்தியா முழுவதும் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்களுக்கு கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசி போடும் பணி கடந்த ஜன. 16-ம் தேதி தொடங்கியது. ஆரம்பத்தில் தடுப்பூசிபோட்டுக் கொள்ள பொதுமக்களிடையே அச்சம் இருந்த நிலையில், கரோனா 2-வது அலை பரவத் தொடங்கியதால் தடுப்பூசி போட்டுக் கொள்ள வருவோரின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்துள் ளது.
கோவாக்சின் தடுப்பூசி முதல் தவணை போட்டவர்களுக்கு 4வாரம் இடைவெளியில் 2-வது தவணையும், கோவிஷீல்டு தடுப்பூசி 2-ம் தவணை 12 வாரம் இடைவெளியிலும் போடப்படுகிறது. தமிழகத்தில் இதுவரை 1.58 கோடிக்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இதில், 1.30 கோடி பேர் முதல் தவணை தடுப்பூசியும், 28 லட்சம் பேர் இரண்டு தவணைதடுப்பூசியும் போட்டுக் கொண்டுள்ளனர். 80 லட்சத்துக்கும் மேற்பட்டோர் காலக்கெடு முடிந்த பிறகும்2-ம் தவணை தடுப்பூசி போடாமல் உள்ளனர். உருமாறிய கரோனாவைரஸ் தொற்றைத் தடுக்க 2தவணை தடுப்பூசிகளை அனைவரும் செலுத்திக் கொள்ள வேண்டும் என்று சுகாதாரத் துறையினர் தெரிவிக்கின்றனர்.
இதுதொடர்பாக பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகத்திடம் கேட்டபோது, “கரோனா வைரஸ் உருமாறிக் கொண்டே இருக்கும். ஒரு தவணைதடுப்பூசி மட்டும் வைரஸுக்கு எதிராக செயல்படாது. 2-வது தவணை தடுப்பூசி கண்டிப்பாக போட்டுக் கொள்ள வேண்டும். அப்போதுதான் உருமாறிய கரோனாவைரஸுக்கு எதிரான முழுமையாக தடுப்பூசி செயல்படும். முதல்தவணை தடுப்பூசி போட்டவர்களுக்கு அவர்கள் அளித்த செல்போன் எண்கள் மூலம் 2-ம் தவணைதடுப்பூசி போடும்படி தெரிவிக்கப்பட்டு வருகிறது” என்றார்.