

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்க வேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக சரிந்துள்ளது. ஆனால், இதன் பலன் பொதுமக்களுக்கு கிடைக்காமல் தடுக்க மத்திய அரசு பெட்ரோலியப் பொருள்கள் மீதான கலால் வரியை உயர்த்தி வருகிறது.
கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கும்போது பெட்ரோல், டீசல் விலையை உடனே உயர்த்தம் எண்ணெய் நிறுவனங்கள் விலை குறையும்போது மட்டும் குறைப்பதில்லை. விலைவாசி உயர்வுக்கு பெட்ரோல், டீசல் விலை உயர்வு முக்கிய காரணமாகும்.
எனவே, பெட்ரோலியப் பொருள்களின் விலையை நிர்ணயம் செய்வதில் மத்திய அரசும், எண்ணெய் நிறுவனங்களும் தெளிவான கொள்கையை பின்பற்ற வேண்டும். லாபத்தை மட்டும் கணக்கில் கொள்ளாமல் மக்களின் நலன் கருதி மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று வாசன் தெரிவித்துள்ளார்.