

அமைப்பு சாரா தொழிலாளர்களின் சமூக பாதுகாப்புக்காக மத்திய, மாநில அரசுகளால் அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியம் செயல்படுத்தப்படுகிறது.
விவசாயத் தொழிலாளர் நல வாரியம், கட்டுமானத் தொழிலாளர் நல வாரியம் என 29 வாரியங்களை உள்ளடக்கி தமிழ்நாடு அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியம் செயல்பட்டு வருகிறது.
இந்த வாரியத்தில் உறுப்பினர்களாக இணைவோரின் குடும்பத்தினருக்கு கல்வி உதவித் தொகை,மகப்பேறு கால உதவி, திருமண உதவித் தொகை, ஓய்வூதியம், காப்பீட்டுத் திட்டம், பணிக் காலத்தில் இறந்தால் நிவாரணத் தொகை உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
கடந்த ஆண்டு ஊரடங்கால் பலர் வாழ்வாதாரம் இழந்ததால் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு அரசு ரூ.1,000 நிவாரணம் அறிவித்தது. இருப்பினும் பெரும்பாலான உறுப்பினர்களுக்கு அரசின் நிவாரணம் கிடைக்கவில்லை.
இதுதொடர்பாக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ.கணேசனிடம் கேட்டபோது, “கடந்த 5 ஆண்டுகளாக சுமார் 75 ஆயிரம் உறுப்பினர்களுக்கு வாரியத்தால் செயல்படுத்தப்படும் உதவித் தொகைகள் வழங்கப்படாமல் இருப்பது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
புதிய அரசு பொறுப்பேற்றதும், உதவித் தொகை கிடைக்கப் பெறாதோர் குறித்து ஆராயப்பட்டது. திமுக ஆட்சி அமைந்து 50 நாட்களைக் கடந்திருப்பதை முன்னிட்டு, முதற்கட்டமாக 50 ஆயிரம் தொழிலாளர்களுக்கு அரசின் உதவித் தொகையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்க உள்ளார். எஞ்சியவர்களுக்கு அடுத்தக்கட்டமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது” என்று தெரிவித்தார்.