Published : 06 Jul 2021 03:13 AM
Last Updated : 06 Jul 2021 03:13 AM

குழந்தைத் திருமணத்தை தடுக்க கண்காணிப்பு அவசியம்: மண்டல ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் கீதா ஜீவன் அறிவுறுத்தல்

அனைத்துப் பகுதிகளையும் தொடர்ந்து கண்காணித்து குழந்தைத் திருமணங்கள் நடக்காத வண்ணம் துறை அலுவலர்கள் முனைப்புடன் பணிபுரிய வேண்டும் என சமூக நலத்துறை அலுவலர்கள் பங்கேற்ற மண்டல ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் கீதா ஜீவன் அறிவுறுத்தியுள்ளார்.

சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பூர், ஈரோடு, கோவை, நீலகிரி ஆகிய 8 மாவட்டங்களைச் சேர்ந்த சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அலுவலர்கள் பங்கேற்ற மண்டல ஆய்வுக் கூட்டம் சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

கூட்டத்துக்கு, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அரசு முதன்மை செயலர் ஷம்பு கல்லோலிகர், சேலம் ஆட்சியர் கார்மேகம், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்ட இயக்குநர் அமுதவள்ளி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை இயக்குநர் ரத்னா, சமூக பாதுகாப்புத் துறை இயக்குநர் வளர்மதி, எம்பி பார்த்திபன், எம்எல்ஏ ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்துக்கு தலைமை வகித்து சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் பேசியதாவது:

குழந்தைத் திருமணங்கள் நடைபெறாமல் தடுக்க குழந்தைத் திருமணங்கள் தடுப்புச் சட்டம் தொடர்பாகவும், இச்சட்டத்தின் கீழ் வழங்கப்படும் தண்டனை தொடர்பாக பொதுமக்களுக்கு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

அனைத்துப் பகுதிகளையும் தொடர்ந்து கண்காணித்து குழந்தைத் திருமணங்கள் நடக்காத வண்ணம் துறை அலுவலர்கள் முனைப்புடன் பணிபுரிய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திவாகர், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை இணை இயக்குநர் ஷெரின் பிலிப், துணை இயக்குநர் அன்பு, மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு வழக்கறிஞர்கள் சரண்யா சந்திரசேகரன், வனிதா மணி, சியாமளா மற்றும் சேலம் உள்பட 8 மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட சமூக நல அலுவலர்கள், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்ட அலுவலர்கள், மாவட்ட சமூக பாதுகாப்பு துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து, சமூக நலத்துறை சார்ந்த சட்டங்கள் தொடர்பாக துறை அலுவலர்களுக்கு புத்தாக்க பயிற்சி அளிக்கப்பட்டது.

அமைச்சர் கீதா ஜீவன் இன்று (6-ம் தேதி) தருமபுரி மாவட்டத்துக்கு செல்கிறார். இன்று காலை 10.30 மணிக்கு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள ஒருங்கிணைந்த சேவை மைய கட்டிடத்தை திறந்து வைக்கிறார். பின்னர், 11 மணியளவில் தருமபுரி பாரதிபுரம் பகுதியில் உள்ள மதுராபாய் திருமண மண்டபத்தில் நடக்க உள்ள நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அலுவலர்கள் பங்கேற்ற மண்டல ஆய்வுக் கூட்டம் சேலத்தில் நடைபெற்றது. இதில், அமைச்சர் கீதா ஜீவன் பேசினார். உடன் ஆட்சியர் கார்மேகம், எம்பி பார்த்திபன், எம்எல்ஏ ராஜேந்திரன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x