

எரிபொருள் சேமிப்பு குறித்த அகில இந்திய ஆங்கில கட்டுரைப் போட்டியில் தூத்துக்குடி மாணவி முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் சார்பாக ‘பெட்ரோலிய சேமிப்பை தேசிய இயக்கமாக மாற்றுவதில் குழந்தைகளின் பங்கு’ என்ற தலைப்பில் அகில இந்திய அளவிலான கட்டுரைப் போட்டி நடைபெற்றது.
நாடு முழுவதிலும் இருந்து 4.82 லட்சம் மாணவ, மாணவியர் கட்டுரைகளை சமர்பித்தனர். இந்த போட்டியில் தூத்துக்குடி ஹோலி கிராஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு பயிலும் டேனியா குரூஸ் பெர்டினா என்ற மாணவியின் கட்டுரை முதல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டது.
கடந்த 16-ம் தேதி டெல்லியில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், மாணவி டேனியா குரூஸ் பெர்டினாவுக்கு பரிசு வழங்கி கவுரவித்தார்.
மாணவி டேனியா குரூஸ் பெர்டினாவுக்கு மடிக்கணினி, ரூ.30 ஆயிரம் ரொக்கப் பரிசு, நினைவுப் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும், ஜப்பான் நாட்டுக்கு கல்விச் சுற்றுலா செல்லவும் மாணவி பெர்டினா தேர்வு செய்யப்பட்டுள்ளார். வரும் ஜூன் மாதம் அவர் ஜப்பான் செல்லவுள்ளார்.
சாதனை படைத்த மாணவி பெர்டினாவின் தந்தை போஸ்கோ ராஜா தூத்துக்குடி மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநராகவும், தாயார் ஏஞ்சல் வெல்லுட் தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரியில் மயக்கவியல் பேராசிரியையாகவும் பணியாற்றி வருகின்றனர்.
மாணவி பெர்டினாவை பள்ளி தலைமை ஆசிரியை, ஆசிரியர்கள், பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் பாராட்டினர்.