Published : 06 Jul 2021 03:13 AM
Last Updated : 06 Jul 2021 03:13 AM

கொளத்தூர் ஏரியில் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகள் ஓராண்டுக்குள் அகற்றப்படும்: தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வல்லுநர் குழு உறுதி

சென்னை

சென்னை கொளத்தூர் ஏரியில் 3 ஆயிரம் ஆக்கிரமிப்புகள் இருப்பதாகவும், அவற்றை அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் ஒரு நாளிதழில் செய்தி வெளியானது. அதனடிப்படையில், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வு தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகிறது.

இது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர், மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், பொதுப்பணித் துறையின் நீர்வள ஆதாரத் துறை, சென்னை குடிநீர் வாரியம், சிஎம்டிஏ, சென்னை மாநகராட்சியின் மூத்த அதிகாரிகள், அண்ணா பல்கலைக்கழக நீரியில் பேராசிரியர் ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

இந்த வழக்கு, அமர்வின் நீதித் துறை உறுப்பினர் நீதிபதி கே.ராமகிருஷ்ணன், தொழில்நுட்ப உறுப்பினர் கே.சத்யகோபால் ஆகியோர் முன்னிலையில் கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. அப்போது, பசுமைத் தீர்ப்பாயம் அமைத்த வல்லுநர் குழு தாக்கல் செய்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மாதவரம் வட்டத்தில் அமைந்துள்ள கொளத்தூர் ஏரியின் நீர்ப்பிடிப்புப் பகுதி 3.21 சதுர கி.மீ. பரப்பில் அமைந்துள்ளது. இதில் நீர் பரந்திருக்கும் அளவு 71 ஹெக்டேர். கொள்ளளவு 1.06 மில்லியன் கனஅடி.

ஆய்வின்போது, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் நீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன. ஏரியில் கழிவுநீர் கலப்பதை 3 மாதங்களுக்குள் தடுக்க சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை குடிநீர் வாரியம் நடவடிக்கை எடுக்க உள்ளது.

ஏரியை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ள கான்கிரீட் வீடுகள், ஓட்டு வீடுகள், கீற்று கூரை வீடுகளை அகற்றுவது தொடர்பாக, நோட்டீஸ் வழங்குமாறு வருவாய்த் துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுப்பணி, வருவாய்த் துறை ஆகியவை 3 மாதங்களுக்குள் கணக்கெடுப்பு நடத்தி, ஓராண்டுக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்ற உள்ளன. இரண்டு ஆண்டுகளுக்குள் ஏரி புனரமைக்கப்பட உள்ளது.

கொளத்தூரைச் சுற்றியுள்ள பகுதிகளில் 2 ஆண்டுகளுக்குள் கழிவுநீர் புதைவடிகால் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. கனமழை காலத்தில் ஏரிக்கு வரும் நீரின் அளவு, கொள்ளளவு, வெளியேறும் அளவு தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகம் மூலம் நீரியல் ஆய்வும் மேற்கொள்ளப்பட உள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தொடர்ந்து, அமர்வின் உறுப்பினர்கள் பிறப்பித்த உத்தரவில், "வல்லுநர் குழு பரிந்துரைத்தவற்றை, தொடர்புடைய துறைகள் செயல்படுத்தியது தொடர்பாக இந்த அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை.

இக்குழுவில் மாவட்ட ஆட்சியரும் ஓர் உறுப்பினர் என்பதால், வல்லுநர் குழு பரிந்துரைகளை செயல்படுத்த அவர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வல்லுநர் குழுவின் பரிந்துரைகளை தொடர்புடைய துறைகள் செயல்படுத்துவதைக் கண்காணித்து, தனி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

அனைத்து துறைகளும் எடுத்த நடவடிக்கைகள் குறித்து தனி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு ஆகஸ்ட் 12-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x