

பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் இனத்தைச் சேர்ந்தவர்களின் குடும்பத்தில், வருமானம் ஈட்டக்கூடிய நபரை கரோனாவில் இழந்திருந்தால் ‘ஸ்மைல்’ திட்டத்தின் கீழ் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஜெ.விஜயாராணி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம், சென்னை மாவட்டத்தில் வசிக்கும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு பல்வேறு கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த இனத்தவரின் குடும்பத்தில் வருமானம் ஈட்டக் கூடிய நபர் கரோனாவால் உயிரிழந்திருந்தால், அவர்களது வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில், டெல்லியில் உள்ள தேசிய பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார வளர்ச்சிக் கழகம் `ஸ்மைல்' என்ற கடன் திட்டத்தை செயல்படுத்த உள்ளது.
இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தவரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். குடும்ப வருமானம் ஈட்டக்கூடியவரின் வயது 18 முதல் 60-க்குள் இருக்க வேண்டும்.
இத்திட்டத்தில் அதிகபட்சம் ரூ.5 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. கடன் தொகையில் 80 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.4 லட்சம் வரை கடனாகவும், மீதமுள்ள 20 சதவீதம் அல்லது ரூ.1 லட்சம் வரை மானியமாகவும் வழங்கப்படும். ஆண்டுக்கு 6 சதவீதம் வட்டி விகிதத்தில் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டும்.
இத்திட்டத்தில் பயன்பெற விரும்பினால், உரிய ஆவணங்களுடன் `மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், சென்னை-1' மற்றும் மாவட்ட கூட்டுறவு வங்கி, அதன் கிளைகள், சைதாப்பேட்டை நகர கூட்டுறவு வங்கி, ஜார்ஜ் டவுன் நகர கூட்டுறவு வங்கி, வெள்ளாள நகர கூட்டுறவு வங்கி, புரசைவாக்கம் நகர கூட்டுறவு வங்கி, தியாகராயா நகர கூட்டுறவு வங்கி ஆகியவற்றை அணுகி, விண்ணப்பப் படிவத்தை பெற்று பூர்த்தி செய்து, சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.