Published : 06 Jul 2021 03:13 AM
Last Updated : 06 Jul 2021 03:13 AM

நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 75 சிறந்த எம்.பி.க்களின் நாடாளுமன்ற உரைகளை புத்தகமாக வெளியிட வேண்டும்: அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் வேண்டுகோள்

இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, 75 சிறந்த எம்.பி.க்களின் நாடாளுமன்ற உரைகளை புத்தகமாக வெளியிட வேண்டும் என்று நாடாளுமன்ற விவகாரத் துறை இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் கூறினார்.

ப்ரைம் பாயின்ட் ஃபவுண்டேஷனின் 21-ம் ஆண்டு விழா இணையவழியில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், அந்த அமைப்பின் சார்பில் சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் `சன்சத் ரத்னா' விருது பெற்ற எம்.பி.க்களின் நாடாளுமன்ற உரைகள் அடங்கிய மின் நூல்கள் (இ-புக்) வெளியிடப்பட்டன.

இதில் நாடாளுமன்ற விவகாரத் துறை இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் பேசியதாவது: சன்சத் ரத்னா விருது பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறந்த உரைகளை, மின் நூல்களாக வெளியிடுவது பாராட்டுக்குரியது.

இந்த நேரத்தில் ப்ரைம் பாயின்ட் பவுண்டேஷனுக்கு ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை 2022 ஆகஸ்ட் 15-ம் தேதி கொண்டாட இருக்கிறோம். 75-வது சுதந்திர தினத்தை நினைவுகூரும் வகையில், முதலாவது நாடாளுமன்றம் தொடங்கி 17-வது நாடாளுமன்றம் வரை சிறந்த 75 எம்.பி.க்களின் நாடாளுமன்ற உரைகளைப் புத்தகமாக வெளியிட வேண்டும்.

அதில், நேரமில்லா நேரம் (ஜீரோ ஹவர்), கேள்வி நேரம், நம்பிக்கைத் தீர்மானம், நம்பிக்கையில்லா தீர்மானம், விவாதம் போன்றவற்றின்போது எழுந்த சிறந்த உரைகளை இடம்பெறச் செய்யலாம். இவ்வாறு அவர் கூறினார்.

திருநெல்வேலி முன்னாள் எம்.பி. எஸ்.எஸ்.ராமசுப்புவின் உரைகள் அடங்கிய மின் நூலை கர்நாடக முன்னாள் முதல்வர் வீரப்பமொய்லி வெளியிட்டார்.

அவர் பேசும்போது, "நாடாளுமன்றத்தில் கூச்சல் இருப்பதற்குக் காரணம், அங்கு மக்களின் குரல் ஒலிக்கிறது. ஒரு எம்.பி. 5 நிமிடம் பேச வேண்டுமானால், அதற்கு பல மணி நேரம் தயார்படுத்திக்கொள்ள வேண்டியுள்ளது. எஸ்.எஸ்.ராமசுப்பு நாடாளுமன்றத்தில் பல தரப்பட்ட கோரிக்கைகளுக்காக குரல் கொடுத்துள்ளார் " என்றார்.

பழனி முன்னாள் எம்.பி. எஸ்.கே.கார்வேந்தனின் நாடாளுமன்ற உரைகள் அடங்கிய மின் நூலை மத்திய முன்னாள் இணை அமைச்சர் ஹன்ஸ்ராஜ் அகிர் வெளியிட்டார். முன்னாள் எம்.பி.க்கள் எஸ்.கே.கார்வேந்தன், எஸ்.எஸ்.ராமசுப்பு ஆகியோரும் பேசினர்.

ப்ரைம் பாயின்ட் ஃபவுண்டேஷன் நிறுவனர் கே.சீனிவாசன் வரவேற்றார். அறங்காவலர் எஸ்.நரேந்திரா அறிமுக உரையாற்றினார். அறங்காவலர் நடராஜன் ராமன் நன்றி கூறினார். நிகழ்ச்சியை அறங்காவலர்-செயலர் பிரியதர்ஷினி ராகுல் தொகுத்து வழங்கினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x