

காஞ்சிபுரம் நகரில் முன்களப் பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு கரோனா தடுப்பூசிபோடும் வகையில் நடமாடும் வாகன சேவை நேற்று தொடங்கிவைக்கப்பட்டது.
இந்த வாகன சேவையை தொடங்கிவைத்த மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி, பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த தமிழக அரசு மேற்கொண்ட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் தொற்று வெகுவாகக் குறைந்துள்ளது.
மாவட்டத்தில் முன்களப் பணியாளர்கள் மற்றும் இணை நோய்உள்ளவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டு, தொற்றின் தாக்கம் முற்றிலும் தடுக்கப்படும். இதுவரை காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2 லட்சத்து 9 ஆயிரத்துக்கு 48 தடுப்பூசிகள் போடப்பட்டன.
தடுப்பூசி போடுவதை அதிகப்படுத்தும் வகையில், நகர்ப்புறப் பகுதிகளில் மக்கள் அதிகம் கூடும் அங்காடிகள், வழிபாட்டுத் தலங்களில் பணிபுரிவோர், சிறு, குறு வியாபாரிகள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசிபோட தற்போது நடமாடும் தடுப்பூசி வாகனம் தொடங்கிவைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு ஆட்சியர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில், மாவட்டவருவாய் அலுவலர் பன்னீர்செல்வம், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பி.ஜெயசுதா, சுகாதாரத் துறை இணை இயக்குநர் ஜீவா, துணை இயக்குநர் பழனி உள்ள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.