

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் நகரில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த நகரைச் சுற்றி 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்தப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் உத்திரமேரூர் வழியாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யாறு, வந்தவாசி, சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்கின்றனர்.
இவர்கள் தவிர உத்திரமேரூக்கு அருகில் உள்ள தொழிற்சாலைக்கு செல்லும் கனரக வாகனங்கள், சென்னையில் இருந்து திருவண்ணாமலை செல்லும் சில பேருந்துகள் உத்திரமேரூர் வழியாகச் செல்கின்றன.
உத்திரமேரூர் பகுதியில் உள்ள சாலைகள் குறுகிய சாலைகளாகஉள்ளன. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. தொழிலாளர்கள், அலுவலக ஊழியர்கள் செல்லும் நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பள்ளி, கல்லூரி செயல்பட்ட நேரங்களில் மாணவர்கள் செல்லும்போதும், வீடு திரும்பும்போதும் இந்தச் சாலை போக்குவரத்து நெரிசலில் சிக்கித் திணறியது.
இந்த போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய உத்திரமேரூர் பகுதிகளில் புறவழிச்சாலை அமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் பலர் வலியுறுத்தி வந்தனர். இவர்களின் கோரிக்கையை ஏற்று கடந்த 2013-ம் ஆண்டு சட்டப்பேரவைக் கூட்டத்தில் உத்திரமேரூரில் புறவழிச் சாலை அமைக்க அறிவிப்பு வெளியானது. இதற்காக முதற்கட்ட பணிக்கான தொகையும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
உத்திரமேரூர்-செங்கல்பட்டு சாலையில் மல்லியங்கரணை விவசாய நிலப்பகுதி வழியாக 4.2 கி.மீ. சாலை வேடப்பாளையம் சாலையில் இணையும்படி திட்டமிடப்பட்டது. இந்த திட்டத்துக்காக உத்திரமேரூர், வேடப்பாளையம், மல்லியங்கரணை உள்ளிட்ட பகுதிகளில் 12 ஏக்கர் நிலங்கள் தேர்வு செய்யப்பட்டன. ஆனால், அதற்கு பிறகு இந்தச் சாலைத் திட்டத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை.
தினந்தோறும் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் திணறும் உத்திரமேரூர் நகரைப் பாதுகாக்க புறவழிச்சாலை பணிகளை விரைந்துநடைமுறைப்படுத்தி பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று தமிழக அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.