

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் ரூ.145.64 கோடி செலவில் 30 ஆயிரம் எல்.இ.டி. விளக்குகள் பொருத்தப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சியில் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளில் சீராக மற்றும் நவீன முறையில் மின்சக்தி சேமிக்கும் வகையில் 30 ஆயிரத்து 12 தெருவிளக்கு கம்பங்களுடன் எல்.இ.டி. தெரு விளக்குகள் ரூ.154.64 கோடியில் அமைத்திட பெருநகர சென்னை மாநகராட்சி மாமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதற்காக தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்பு நிதி நிறுவனத்தின் மூலம் ரூ.87.38 கோடி கடனாகவும், ரூ.43.69 கோடி மானியமாகவும் மாநகராட்சி நிதி ரூ.14.57 கோடியும் என மொத்தம் ரூ.145.64 கோடி செலவில் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன.
சோடியம் ஆவி விளக்குகளை அகற்றி புதிதாக எல்.இ.டி. விளக்குகள் அமைப்பதன் மூலம் 40 முதல் 50 சதவீதம் வரை மின்சாரம் சேமிக்கப்படுகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் சென்னை மாநகராட்சி மூலதன நிதியின் கீழ் 24 ஆயிரத்து 827 எல்.இ.டி. தெருவிளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
மீதம் உள்ள 30 ஆயிரத்து 12 தெருவிளக்குகள் அமைத்திட ரூ.145.64 கோடி தமிழ்நாடு நகர்புற உள்கட்டமைப்பு நிதி நிறு வனத்தின் மூலம் மேற்கொள்ள சென்னை மாநகராட்சி மாமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், மின்சிக்கனம் கருதி சைதாப்பேட்டை பகுதிக்குட்பட்ட சில வார்டுகளில் உள்ள அனைத்து சோடியம் ஆவி விளக்குகளை அகற்றி புதிதாக எல்.இ.டி. விளக்குகளாக மாற்றி அமைக்கும் பணி ரூ.8.37 கோடி மதிப்பீட்டில் அமைக்க தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.