பக்தர்களின் தாகம் தீர்க்க பழநியில் ரூ.23 கோடியில் குடிநீர் திட்டப் பணிகள்: 3 அமைச்சர்கள் ஆய்வு

பக்தர்களின் தாகம் தீர்க்க பழநியில் ரூ.23 கோடியில் குடிநீர் திட்டப் பணிகள்: 3 அமைச்சர்கள் ஆய்வு

Published on

பழநி கோயிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக ரூ.23 கோடியில் கட்டப்பட்டு வரும் குடிநீர் திட்டப் பணிகளை அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, கூட்டுறவு அமைச்சர் ஐ.பெரியசாமி, உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி ஆகி யோர் நேற்று ஆய்வு செய்தனர்.

பழநியில் பக்தர்களின் வசதிக்காக ரூ.23 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் குடிநீர் திட்டப்பணிகள், கோயில் மேம்பாட்டுப் பணிக்காக 52 ஏக்கர் நிலங்களைக் கையகப்படுத்தும் பணி, பஞ்சாமிர்தம் தயாரிப்பு பணி, சித்தா கல்லூரி அமையவுள்ள இடம் ஆகியவை குறித்தும் ஆய்வு நடந்தது. தொடர்ந்து கோயில் அதி காரிகள், பொறியாளர்கள், பள்ளி மற்றும் கல்லூரி முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தினர்.

ஆய்வின்போது பஞ்சாமிர்தம் தயாரிப்பு ஆலையில் பணிபுரியும் தற்காலிகப் பணியாளர்களிடம் வேலை மற்றும் வேலை நேரம் குறித்து அமைச்சர் கேட்டறிந்தார். அப்போது 10 ஆண்டுகளாக தினக் கூலியாக தினமும் ரூ. 250 ஊதியத்தில் பணிபுரிவதாக 30 பெண் தொழிலாளர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் 30 பேரையும் பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்கும்படி பழநி கோயில் இணை ஆணையரிடம் அமைச்சர் சேகர்பாபு கேட்டுக் கொண்டார்.

ஆய்வின்போது இந்து சமய அறநிலைய ஆணையர் குமர குருபரன், எம்.பி. வேலுச்சாமி, எம்.எல்.ஏ.க்கள் செந்தில்குமார், காந்திராஜன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in