

இந்து முன்னணி தலைவர் இறுதி ஊர்வலத்தில் போலீஸார் தடியடி நடத்தினர். கல்வீச்சில் போலீஸ் ஜீப், 13 பஸ்கள் சேதமடைந்தன.
திருவள்ளூர் மாவட்ட இந்து முன்னணி தலைவராக இருந்த சுரேஷ்குமார், புதன்கிழமை இரவு சென்னை, அம்பத்தூரில் கொலை செய்யப்பட்டார். கன்னியாகுமரி மாவட்டம், திங்கள் நகரை அடுத்த கக்கோடு கிராமத்தைச் சேர்ந்த இவருக்கு, புவனேஸ்வரி என்ற மனைவியும், இரண்டு மகள்களும் உள்ளனர்.
அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்கு பிறகு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வெள்ளிக்கிழமை காலை 6.30 மணிக்கு நாகர்கோவில் கொண்டுவரப்பட்டது. நாகர் கோவில் நகருக்கு வெளியே உள்ள `அப்டா’ சந்தை அருகே ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டது. அங்கிருந்து கக்கோடு வரை சுரேஷ்குமார் உடலை ஊர்வலமாக எடுத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கு ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டனர்.
இறுதி ஊர்வலம்
நெல்லை டி.ஐ.ஜி. சுமித்சரண், கன்னியாகுமரி எஸ்.பி. மணிவண்ணன், ஏ.டி.எஸ்.பி. இளங்கோ, சப் - கலெக்டர் சங்கர்லால் குமாவத் ஆகியோர் `அப்டா’ சந்தை அருகே வந்தனர். காலை 7.30 மணி வரை ஊர்வலம் தொடங்கவில்லை.
ஊர்வலத்தை உடனடியாக தொடங்க இந்து முன்னணியினரிடம் போலீஸார் வலியுறுத்தினர். காலை 8.15 மணிக்கு இந்து முன்னணி, பா.ஜ.க. தொண்டர்கள் இருசக்கர வாகனத்தில் செல்ல, சுரேஷ்குமாரின் உடல் ஆம்புலன்ஸில் கொண்டு செல்லப்பட்டது. மதியம் கக்கோடு கிராமத்தில் சுரேஷ்குமாரின் உடல் தகனம் செய்யப்பட்டது. மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.
பதற்றம், தடியடி
ஊர்வலம் வில்லுக்குறி காரவிளை வந்தபோது, மோட்டார் சைக்கிளில் சென்ற 2 இளைஞர்கள் ஊர்வலத்துக்கு குறுக்கே வந்தனர். இந்து முன்னணி தொண்டர்கள் அவர்களை தாக்க பாய்ந்தனர்.
இரு இளைஞர்களை போலீஸார் ஜீப்பில் ஏற்றினர். போலீஸ் ஜீப்பை வழிமறித்த சில தொண்டர்கள், இளைஞர்களை கீழே இறக்கி விடும்படி கோஷமிட்டனர். போலீஸ் ஜீப் மீது கல் வீசப்பட்டது. கூட்டத்தை கலைக்க போலீஸார் லேசான தடியடி நடத்தினர். இதனால், ஊர்வலத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
13 பஸ்கள் சேதம்
இந்து முன்னணி தலைவர் கொலையைக் கண்டித்து, கன்னியா குமரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில், வியாழக்கிழமை இரவு பஸ்கள் மீது மர்ம நபர்கள் கல் வீசி தாக்குதல் நடத்தினர்.
மேல்புறம், தேங்காய்பட்டிணம், வட்டவிளை, குறும்பனை, நாகர்கோவில் உள்ளிட்ட இடங்களில் 13 அரசு பஸ்கள் மீது கல் வீசி தாக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, வியாழக்கிழமை இரவு நாகர்கோவிலில் இருந்து கிராமங்களுக்கு செல்லும் பஸ்கள் நிறுத்தப்பட்டன. வெள்ளிக்கிழமை காலை 8 மணி வரை பஸ்கள் இயங்காததால் பயணிகள் பாதிக்கப்பட்டனர். கல்வீச்சில் ஈடுபட்டதாக 6 பேரை போலீஸார் பிடித்துச்சென்றனர்.