Last Updated : 01 Feb, 2016 03:48 PM

 

Published : 01 Feb 2016 03:48 PM
Last Updated : 01 Feb 2016 03:48 PM

இனிதாய் மரம் வளர்த்து இலவசமாய் தருகிறார்: கோவில்பட்டி மரக்குமாரின் பசுமை மீட்டெடுப்பு பயணம்

கோவில்பட்டியில் மரக்கன்றுகளை வளர்த்து பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறார் அரசு ஊழியர் குமார். திருமணம் உள்ளிட்ட விழாக்களுக்கு செல்லும் போது மரக்கன்றுகளையே பரிசாக வழங்கி வருகிறார்.

உலக வெப்பமயமாக்கலை குறைக்க மரக்கன்றுகள் அதிகம் நட வேண்டும் என்ற விழிப்புணர்வு உலகம் முழுவதுமே ஏற்பட்டு வருகிறது. இருப்பினும் மரம் வளர்க்க வேண்டும் என்ற எண்ணமும், சிந்தனையும் ஒரு சிலருக்கே தோன்றுகிறது.

அரசு ஊழியர்

அந்த ஒரு சிலரில் கோவில்பட்டி குமாரும் ஒருவர். அனைவராலும் மரக்குமார் என்று அழைக்கப்படும் இவர், பொது இடங்களில் மரக்கன்றுகளை நட்டு வளர்த்து வருவதுடன், அவற்றை பொது மக்களுக்கு இலவசமாகவும் வழங்கி வருகிறார்.

கோவில்பட்டி அருகேயுள்ள இலுப்பையூரணி ஊராட்சிக்கு உட்பட்ட சிந்தாமணி நகரை சேர்ந்தவர் அ.குமார் (49). கோவில்பட்டியில் உள்ள கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வருகிறார். மரங்கள் வேகமாக அழிக்கப்பட்டு, மழை வளம் குறைந்து வருவதை உணர்ந்த குமாருக்கு மரம் வளர்க்க வேண்டும் என்ற எண்ணம் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன் தோன்றியது.

பலருக்கும் விநியோகம்

தானே மரக்கன்றுகளை உற்பத்தி செய்து, அதனை பொது இடங்களில் நட்டு வளர்த்து வந்தார். நாளடைவில் பொதுமக்களுக்கும் இலவசமாக மரக்கன்றுகளை கொடுக்க தொடங்கினார். இதனால் ரோட்டரி, அரிமா போன்ற அமைப்புகள் அவரிடம் மரக்கன்றுகளை வாங்கி நடத் தொடங்கின. இதனால் கோவில்பட்டி பகுதி முழுவதும் பிரபலமானார். தற்போது குமார் என்றால் யாருக்கும் தெரியாது. மரக்குமார் என்றால் தான் அனைவருக்கும் தெரியும். அந்தளவுக்கு மரக்கன்றுகளால் பிரபலமாகிவிட்டார். தான் பணியாற்றும் கால்நடை பராமரிப்புத் துறை உதவி இயக்குநர் அலுவலக வளாகத்தில் ஒரு சிறிய இடத்திலேயே மரக்கன்றுகளை அவர் வளர்த்து வருகிறார்.

மரம் அன்பளிப்பு

குமார் கூறும்போது, ‘மரம் வளர்க்க வேண்டும் என்ற எண்ணம் எனது சிறு வயதிலேயே உண்டு. அவ்வப்போது மரங்களை வளர்த்து பராமரித்து வந்தேன். கடந்த 9 ஆண்டுகளாக மரக்கன்றுகளை உருவாக்கி கோவில்பட்டி பகுதி முழுவதும் நட்டு வருகிறேன்.

எங்கள் அலுவலக வளாகம், நூலகம், சார் பதிவாளர் அலுவலகம், நீதிமன்ற வளாகம் உள்ளிட்ட அரசு அலுவலக வளாகங்களில் மரக்கன்றுகளை தொடர்ந்து நட்டு வருகிறேன்.

சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற விழாக்களின் போது அதன் ஆண்டுக்கேற்ற எண்ணிக்கையில் மரக்கன்றுகளை தெருக்களில் நடுவேன். மேலும், திருமணம் போன்ற விழாக்களுக்கு போகும்போது மரக்கன்றுகளையே மணமக்கள் உள்ளிட்டோருக்கு அன்பளிப்பாக கொடுப்பேன். சில இடங்களில் மணமக்களை கொண்டே மரக்கன்றுகளை நட வைத்துள்ளேன். ரோட்டரி, அரிமா போன்ற பல்வேறு அமைப்பினர் என்னிடம் மரக்கன்றுகளை வாங்கி நடுகின்றனர்.

அதிகாரிகள் ஊக்கம்

மரக்கன்றுகளை நான் பணிபுரியும் அலுவலக வளாகத்திலேயே வளர்த்து வருகிறேன். வேம்பு, புங்கை மரங்களை அதிகம் வளர்க்கிறேன். பணிக்கு எந்தவித இடையூறும் ஏற்படாத வகையில் வேலை நேரம் முடிந்த பிறகே இந்த பணிகளை கவனிக்கிறேன். மேலதிகாரிகள் என்னை ஊக்கப்படுத்துகின்றனர்.

இதுவரை கோவில்பட்டி பகுதியில் 1,500 மரக்கன்றுகளை நட்டுள்ளேன். அவற்றில் 500-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நன்கு வளர்ந்துள்ளன.

தற்போது என்னிடம் சுமார் 50 மரக்கன்றுகள் நடுவதற்கு தயாராக உள்ளன. அனைவரும் தங்களால் முடிந்த அளவுக்கு மரக்கன்றுகளை நட்டால் நாட்டை பசுமையாக்கலாம்’ என்றார் அவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x