Published : 06 Jul 2021 03:14 AM
Last Updated : 06 Jul 2021 03:14 AM

குறுவை தொகுப்புத் திட்டத்தால் தஞ்சை மாவட்டத்தில் கூடுதலாக 45 ஆயிரம் ஏக்கரில் நெல் சாகுபடி: அரசு தலைமைக் கொறடா கோவி.செழியன் தகவல்

தஞ்சாவூர்

குறுவை சாகுபடி தொகுப்புத் திட்டத்தால், தஞ்சாவூர் மாவட்டத்தில் கூடுதலாக 45 ஆயிரம் ஏக்கர் குறுவை சாகுபடி பரப்பு அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என அரசு தலைமைக் கொறடா கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.

குறுவை சாகுபடி தொகுப்பு திட்டத்தில் விவசாயிகளுக்கு இடுபொருட்கள் வழங்கும் பணி தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று தொடங்கி வைக்கப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே விளாங்குடியில், வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், குறுவை சாகுபடி தொகுப்புத் திட்டம் மூலம் 100 சதவீத மானியத்தில் ரசாயன உரங்களை பயனாளிகளுக்கு வழங்கும் பணியை அரசு தலை மைக் கொறடா கோவி.செழியன் தொடங்கி வைத்தார்.

அப்போது, கோவி.செழியன் பேசியது: மேட்டூர் அணை திறந்து 25 நாட்களுக்குள் 2 மூட்டை யூரியா, ஒரு மூட்டை டிஏபி, அரை மூட்டை பொட்டாஷ் என கிட்டத்தட்ட ரூ.2,700 மதிப்புள்ள இடுபொருட்களை விவசாயிகளுக்கு வழங்கியுள்ளோம். விவசாயம் முன்னேற்றப்பாதையில் செல்ல வேண்டும் என்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் நடப் பாண்டில் 1.05 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், தற்போது அரசு அறிவித்துள்ள குறுவை சாகுபடி தொகுப்புத் திட்டம் காரணமாக சாகுபடி பரப்பு 45 ஆயிரம் ஏக்கர் அதிகரித்துள்ளது. இதனால், 1.50 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.

இந்நிகழ்ச்சியில் எம்பிக்கள் எஸ்.எஸ்.பழநிமாணிக்கம், எஸ்‌.ராமலிங்கம், எம்எல்ஏக்கள் துரை.சந்திரசேகரன், டி.கே.ஜி.நீலமேகம், க.அன்பழகன், கா.அண்ணாதுரை, என்.அசோக்குமார், எம்.எச்.ஜவாஹிருல்லா, ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, வேளாண்மை இணை இயக்குநர் அ.ஜஸ்டின் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x